விளாத்திகுளம் வட்டாரத்தில் தொடர் மழையால் பயிர்கள் அழுகல்

தூத்துக்குடி, டிச.10: விளாத்திகுளம் வட்டாரத்தில் பெய்த தொடர் மழையால் அழுகியபயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடத்தப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மனு நீதிநாள் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோரிக்கைகள் தெரிவிக்க அலுவலக வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களது குறைகளை மனுக்களாக எழுதி சமர்ப்பித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முத்தையாபுரம் மற்றும்  பேரிலோவன்பட்டி கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது குறைகளுக்கு உரிய தீர்வுகாண கோரி மனுக்களை பெட்டியில் செலுத்தினர். இதில் முத்தையாபுரம்  கிருஷ்ணாநகர் மேற்கு பகுதி மக்கள் சமர்ப்பித்த மனுவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் பெய்த கனமழையால், எங்கள் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

மேலும்  முறையாக சாலை வசதிகளும் இங்கு செய்துதரப்படவில்லை. இதனால் பள்ளி வாகனங்கள், பிற வாகனங்கள் செல்ல  இடையூறாக உள்ளது. பராமரிப்பின்றி பழுதான தெருவிளக்குகளும் கடந்த 2 மாதங்களாக இரவில் எரியவில்லை. எனவே, இதுவிஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இதனிடையே விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் மழையால் அழுகி சேதமடைந்த உளுந்து, பாசி பயிர்களுடன்  கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர். அதில் அண்மையில் தொடர்ந்து பெய்த கனமழையால், எங்கள் பகுதியில் பயிரிட்டிருந்த உளுந்து,  பாசி பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளன. எனவே, பாதிப்புக்கு உள்ளான தங்களுக்கு பயிர்காப்பீடு  திட்டம் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு  மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related Stories: