சட்டவிரோதமாக வெங்காயம் பதுக்கல் புகார் தூத்துக்குடி ஓட்டல், கடை, குடோன்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை

தூத்துக்குடி, டிச. 10: சட்டவிரோதமாக வெங்காயம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து தூத்துக்குடி  மாவட்டத்தில் செயல்படும் ஓட்டல், கடை, குடோன்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வெங்காயம் விலை கிடுகிடுவென  அதிகரித்துள்ளது. நல்ல வெங்காயம் கிலோ  ரூ.180 முதல் ரூ.200 வரையில் விற்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் ரூ.200 கொடுத்தாலும் கூட தற்போது வெங்காயம் உடனே கிடைப்பதில்லை. இந்த  விலையேற்றம் வரத்து அதிகரித்தால் மட்டுமே குறையும் நிலை உள்ளது. இதனால்  வெங்காயத்தின் விலை தற்போதைக்கு குறையும் வாய்ப்பு இல்லை என்ற நிலை  உருவாகியுள்ளது. இதன் காரணமாக சிலர் கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிட்டு  வெங்காயத்தை பதுக்கி வைக்கும் நிலை உருவாகியுள்ளதாக உணவு பொருள் கடத்தல்  தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைந்துள்ளன. இதனால் உணவு பொருள்  கடத்தல் போலீசாருக்கு டிஜிபி பிரதீப் வி பிலிப் மற்றும் எஸ்பி ஸ்டாலின்  ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பி வெங்காயம் பதுக்கலை தடுக்க உத்தரவிட்டுள்ளனர்.  மேலும் மார்க்கெட்கள், குடோன்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்திடவும்  உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பொதுமக்கள், வர்த்தக மையங்கள்,  வர்த்தகர்கள், குடோன்களின் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரையும்  சந்தித்து வெங்காயம் பதுக்கல், கடத்தல் தொடர்பான தகவல்கள் இருந்தால்  உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி விடுத்துள்ள செய்திக்

குறிப்பு: வெங்காயம்  விலை உயர்வு காரணமாக பதுக்கல், கடத்தல், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள்  நடக்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு  சட்டவிரோதமாக  அத்தியாவசிய குடிமை பொருள்களில் ஒன்றான வெங்காயம் உள்ளிட்டவற்றை  பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தூத்துக்குடி  மாவட்டத்தில் வெங்காயம் சட்டவிரோதமாக பதுக்கலோ அல்லது கடத்தல் போன்ற  சம்பவங்களோ நடந்தால் இது குறித்து பொதுமக்கள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள்  ரகசியம் காக்கப்படும். இதனால் பொதுமக்கள் சின்ன வெங்காயம், சாம்பார்  வெங்காயம், பல்லாரி உள்ளிட்டவை சட்டவிரோத பதுக்கல் குறித்து தூத்துக்குடி  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு 9498104851,  9498194533,9445880573 ஆகிய எண்களில் புகார்களாகவோ அல்லது வாட்ஸ்அப்  தகவல்களாவோ தெரிவிக்கலாம் மற்றும் 0461346608 ஆகிய எண்ணிலும்   தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  நேற்று முதல் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடோன்கள்,  மண்டிகள், காய்கறி மார்க்கெட்கள் உள்ளிட்ட இடங்களில் உணவு கடத்தல் தடுப்பு  பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: