வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் காவல் கண்காணிப்பு அறை செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

வேலூர், டிச.10: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் காவல் கண்காணிப்பு அறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட பல மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி தினமும் 750க்கும் மேற்பட்ட பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இன்று கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கூட்டம் பஸ் நிலையத்தில் அலைமோதும். இதேபோல், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனால், வேலூர் புதிய பஸ்நிலையம் 24 மணிநேரமும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில், பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் கூட்டத்தில் நுழையும் திருடர்கள் செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்து செல்லும் சம்பவங்கள் புதிய பஸ் நிலையத்தில் தொடர்கதையாகி வருகிறது. எனவே, புதிய பஸ்நிலையத்தில் 24 மணிநேரமும் போலீஸ் கண்காணிப்பு போடப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. மேலும் புதிய பஸ் நிலையத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணிக்க காவல்துறை கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறை பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால், பஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, காவல்துறை கண்காணிப்பு அறையை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதோடு பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

Related Stories:

>