×

தமிழக அரசு சார்பில் கிராம பஞ்சாயத்துகளில் கால்பந்து, கபடி விளையாட்டு மைதானம்

வேலூர், டிச.10: தமிழக அரசு சார்பில் கிராம பஞ்சாயத்துகளில் கால்பந்து மற்றும் கபடி விளையாட்டுகளுக்கான மைதானம் அமைக்கப்படும் என்று தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் அளவிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்து பேசிய கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான கால்பந்து போட்டி நேற்று நடந்தது. போட்டி தொடக்க விழாவுக்கு விஐடி உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது: கால்பந்து போட்டிக்கு பெயர் பெற்ற ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா போன்று நம் நாடும் கால்பந்து போட்டியில் சாதிக்க வேண்டும். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போன்று, மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கிராம பஞ்சாயத்துகளில் கால்பந்து மற்றும் கபடி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விஐடி உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் பேசியதாவது: விஐடி பல்கலைக்கழகம் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து வருகிறது. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க விஐடி உதவி செய்யும்.
நம் நாட்டில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் உலக சாதனைகளை செய்ய முடியும். விளையாட்டில் ஈடுபடும்போது, மன அழுத்தம், கோபம் குறையும். இலக்கை நோக்கி கவனம் செலுத்தும் தன்னம்பிக்கை வளரும். மேலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை பெற்றுத்தரும். விஐடியில் எதிர்வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின்போது விளையாட்டுக்கென சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் தமிழகத்தில் இருந்து 37, கர்நாடகாவில் இருந்து 33, ஆந்திராவில் இருந்து 17, கேரளாவில் இருந்து 11, தெலங்கானாவில் இருந்து 9, புதுவையில் இருந்து ஒரு அணி என மொத்தம் 108 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வரும் 18ம் தேதி நிறைவடையும். போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பஞ்சாப்பில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் பங்கேற்கின்றன.

விழாவில் விஐடி விளையாட்டு துறை இயக்குனர் தியாகசந்தன், இணை துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் சத்தியநாராயணன் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டுத்துறை மாணவர் செயலர் அஸ்வின்சுரேஷ் நன்றி கூறினார். படவிளக்கம் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையேயான கால்பந்து போட்டியை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். உடன், விஐடி உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன்.

Tags : playground ,village panchayats ,Government of Tamil Nadu ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...