×

பண மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெட்ரோல் ஊற்றி ஏசி மெக்கானிக் தற்கொலை முயற்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர், டிச.10: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பண மோசடி தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த ஏசி மெக்கானிக் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பிற்பகல் 1.30 மணியளவில் மனு அளிக்க வந்த நபர் திடீரென பிளாஸ்டிக் கவரில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உடனே தடுத்து நிறுத்தி, அவரை தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டியை சேர்ந்த தேவேந்திரகுமார்(50), ஏசி மெக்கானிக் என்பதும், இவர் பரந்தாமன், சத்தியமூர்த்தி ஆகியோருக்கு கடந்த 2015 ஆண்டில் 48 கிராம் நகையும், பணம் என மொத்தம் ₹8 லட்சத்தை கடனாக கொடுத்தாராம்.

பின்னர் 2016ம் ஆண்டு பணத்தை கேட்டுள்ளார். ஆனால், பரந்தாமனும், சத்தியமூர்த்தியும் நாட்களை கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதுவரை கலெக்டர் அலுவலகத்தில் 3 முறை மனு அளித்தும் எந்த பயனுமில்லை. எனவே இப்போது தான் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : mechanic ,AC ,
× RELATED டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்