×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 46 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நகராட்சி ஆணையாளர் தகவல்

திருவண்ணாமலை, டிச.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் 46 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை நகரில் 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் மற்றும் 38 இடங்களில் தற்காலிக கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக கார் நிறுத்துமிடத்தில் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, ஒலி பெருக்கி வசதி, வழிகாட்டும் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 46 இடங்களில் குடிநீர் தொட்டி வைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. 4 இடங்களில் நிரந்தர ஆர்ஓ சிஸ்டம்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.் தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவல பாதையில் 30 இடங்களில் பெண்களுக்கான தற்காலிக சிறுநீர் கழிப்பிடம், 12 இடங்களில் நிரந்தர நவீன கழிப்பிடம் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. நகரின் முக்கிய இடங்களில் நடமாடும் கழிபிடமும், 24 மணி நேரமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள 1465 துப்புரவு பணியாளர்களை கொண்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க 24 மணி நேரமும் தகவல் சேவை மையம் (டோல்ப்ரி நெ.1800 425 3663) நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையாளர் வே.நவேந்திரன் தெரிவித்தார்.

Tags : Municipal Commissioner ,places ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...