×

கொள்ளிடம் பகுதியில் பொதுச் சொத்துக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

கொள்ளிடம், டிச.10: கொள்ளிடம் பகுதியில் உள்ள பொதுச் சொத்துக்களின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த 42 ஊராட்சிகளில் 200 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மொத்தத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான குளங்களும், கோயில் குளங்களும் இருந்தன. இந்தக் குளங்களில் சுமார் ஆயிரம் குளங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. இக்குளங்கள் இன்றைய நிலையில் மூடப்பட்டு, இதில் குடியிருப்பு வீடுகளும், கட்டிடங்களும் எழும்பியுள்ளன. இதனால் நிலத்தடி நீரை போதிய காலத்திற்கு சேமித்து வைக்க முடியாத நிலைக்கு பொய்விட்டது. பாசன கிளை வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் வடிவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளன. ஆனால் மேலும் ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜெகசண்முகம் கூறுகையில்,

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் தூறையைச் சேர்ந்த அலுவலர்களில் சிலர் உடந்தையாக இருந்து பொது இடங்களையும், ஊராட்சிக்குளங்களையும் ஆக்கிரமிக்க உதவியாக இருந்து வருகின்றனர். கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளுரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொன்னக்காட்டுப்படுகையில் பொதுப்பணித்துறையின் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. கீரங்குடி கிராமத்திலும் பாசன வடிகால் வாய்க்கால் மூடப்பட்டுள்ளது. தண்ணீர் வயலுக்கு செல்லவும் முடியவில்லை. வடியவும் வழியில்லை. கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி, மாதிரவேளுர் , கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளிலும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் வழி நடைபாதை கிளை வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள ஒரு பொதுக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு தற்பொழுது ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட வசதி படைத்த சிலர் பொதுச்சொத்துக்களை ஆக்கிரம்மிப்பவர்கள். மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏழை எளிய நிலமற்றவர்களுக்கு பொதுச்சொத்துக்களை அரசு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : property ,loot area ,
× RELATED பேர்ப்ரோ 2024 வருடாந்திர சொத்து ரியல்...