ஜீப் பேனட்டில் மறைத்து கேரளாவுக்கு ரூ.1லட்சம் புகையிலை கடத்தியவர் கைது

செங்கோட்டை, டிச.10: செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு பயணிகள் ஜீப் பேனட்டில்  மறைத்து கடத்திய இரண்டு மூட்டை  புகையிலையை போக்குவரத்து சோதனை சாவடி போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பால், காய்கறி, பூ, சிமென்ட் போன்ற பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அன்றாடம் லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல் பாவூர்சத்திரம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட சந்தைகளிலிருந்து காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் நேற்று புளியரை போக்குவரத்து சோதனை சாவடியில்  பயணிகள் ஜீப்பில் மறைத்து புகையிலை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  இன்ஸ்பெக்டர் பிரபு ராம் திவாகரன் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள்  தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது  செங்கோட்டையில்  இருந்து  கேரளாவுக்கு   ஆட்களை ஏற்றிச்செல்லும் ஜீப்பின் முன் பேனட்டில் வைத்து கடத்திய ரூ.1லட்சம் மதிப்புள்ள இரண்டு மூடை  புகையிலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து  புகையிலை மூட்டைகளை  பறிமுதல் செய்த போலீசார் கேரள மாநிலம் கழுதுருட்டி பகுதியை சார்ந்த சாகுல் அமீது மகன் நாகூர் மீரான் (35)  என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஜீப்பையும் டிரைவரையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: