வாடகைக்கு வீடு தர மறுப்பு உடல் நலம் குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்

தென்காசி, டிச.10: தென்காசியில் உடல் நலம் குன்றிய மகளுடன் வசிப்பதால் வாடகைக்கு வீடு கொடுப்பதற்கு தயங்குகின்றனர். எனவே கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசியை அடுத்த கொட்டாகுளம் என்ற ஊரில் வசித்து வருபவர் முருகையா (68). இவரது மனைவி இசக்கியம்மாள் (58). இவர்களுக்கு 2 மகன்களும் சுப்புலட்சுமி என்ற 35 வயது நிரம்பிய மகளும் உள்ளனர். மகன்கள் கைவிட்டு சென்ற நிலையில் மனைவி இசக்கியம்மாள் மற்றும் மனநலம் குன்றிய தாடை விலகல் நோயால் அவதிப்பட்டு வரும் மகள் ஆகியோருடன் முருகையா வசித்து வருகிறார். வாடகைக்கு வீடு கொடுக்க மறுப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம். எனவே அரசு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கட்டித்தர வேண்டும், அவ்வாறு இல்லையெனில் நோயால் அவதிப்பட்டு வரும் தனது மகள் சுப்புலட்சுமியை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தென்காசி கலெக்டரிடம் முருகையா தம்பதியினர் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து முருகையா கூறுகையில், ‘மகன்கள் திருமணமாகாத நிலையில் கை விட்டுவிட்டு சென்று விட்டனர். அவர்கள் இருவரும் எங்களுடன் தொடர்பில் இல்லை. மனைவிக்கும் உடல் நலம் குன்றிய நிலையில் தாடை விலகல் நோயால் அவதிப்பட்டு வரும் மகளுடன் குடியிருக்க வீடு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால் கூட அதில் குடிசை அமைத்து வசித்து கொள்வோம். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தாடை விலக நோயால் அவதிப்பட்டு வரும் மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்றார். மேலும் ஆலங்குளத்தை அடுத்த சோலைசேரி கிராமத்தில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நீதி கிடைக்கவேண்டும் வகையில் அரசே பொறுப்பேற்று அரசு காப்பகத்தில் தங்க வைத்து உயர்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் நிர்பயா நிதியிலிருந்து பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நேற்று கலெக்டரிடம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைவர் பழனி, செயலாளர் கற்பகம், வேல்முருகன் ஆகியோர் மனு கொடுத்தனர். மஸ்கட்டில் பரிதவிக்கும் 2 தொழிலாளர்களை மீட்க மனு: வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில், கலெக்டர் அருண்சுந்தர் தயாளனிடம் அளித்துள்ள மனுவில், ‘மஸ்கட் நாட்டில் வேலைக்காக சென்று பரிதவித்து வரும் சொக்கம்பட்டியை சேர்ந்த பூலித்துரை (29), சங்கரன்கோவில் மலையன்குளத்தை சேர்ந்த கந்தசாமி ஆகிய இருவரையும் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கலீல்ரகுமான் மற்றும் பூலித்துரை, கந்தசாமி ஆகிய இருவரின் குடும்பத்தினரும் மனு கொடுத்தனர்.

Related Stories:

>