×

ஜனவரி 8ல் நடக்க இருக்கும் வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி குமரி முழுவதும் வாகன பிரசாரம் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில், டிச.10 : ஜனவரி 8ம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி, குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் மேற்கொள்வது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய பா.ஜ. அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக தொழிலாளர்களின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதை கண்டித்தும், தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜனவரி 8ம்தேதி அகில இந்திய அளவில் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்  நடத்த போவதாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி வருகிற 8ம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கும் வகையில், குமரி மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம், நாகர்கோவிலில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொமுச சார்பில் ஞானதாஸ், இளங்கோ, சி.ஐ.டி.யு. சார்பில் தங்கமோகன், அந்தோணி, எச்.எம்.எஸ். சார்பில் முத்துக்கருப்பன், குமாரசாமி பிள்ளை, ஐ.என்.டி.யு.சி. அனந்த கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி ராமகிருஷ்ணன் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய பா.ஜ. அரசை கண்டித்து அடுத்த மாதம் 8ம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாகன பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,vehicle campaign ,strike action ,Kumari ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்