×

புதுக்கடை அருகே அரசு நிலத்தை ஆக்ரமித்து கோசாலை இரு தரப்பினர் மோதும் சூழல் உருவானதால் போலீஸ் குவிப்பு

புதுக்கடை,டிச.10 :  புதுக்கடை அருகே தொழிக்கோடு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு தரப்பினர் ஆக்ரமித்து முள்வேலி அமைத்துள்ளதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. புதுக்கடையை அடுத்த  இனயம்புத்தன் துறை கிராம எல்கைக்குட்பட்ட காவு மூலை  பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 1 ஏக்கர் உள்ளது. அதனை அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் அந்த இடத்தில் முள்வேலி அமைத்து கோசாலை நடத்த துவங்கினர்.இதற்கு அப்பகுதியில் உள்ள மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பி அதனை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிறு  மாலை ஒரு தரப்பினர் முள்வேலியை அகற்றுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்தப் போவதாக நோட்டீஸ் வினியோகம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாலையில் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கீழ்குளம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எமில் ஜெபசிங் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுகவை சேர்ந்த கோபால், வழக்கறிஞர் ஜெபா, காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர் பால்மணி, ஜெயராஜ், ராஜகிளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வழக்கறிஞர் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் மற்றும் டென்னிஸ், எட்வின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை அறிந்த மற்றொரு தரப்பினர் சாலையின் மறுபுறம் திரண்டனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இது குறித்து கிடைத்த தகவலின்பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ஆலோசனை கூட்டம் நடத்தியவர்கள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு அவர்கள் வழியாக அரசு அதிகாரிகளிடம் பேசுவது என முடிவு செய்து கலைந்து சென்றனர்.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : clash ,state land ,Pudukkadai ,
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...