×

மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உடைந்த கால்வாயை சீரமைப்பதில் மெத்தனம் : விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

திருவொற்றியூர்:  மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகர் பகுதிகளில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழை காலத்தில்   ரெட்டேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் இப்பகுதியில்  உள்ள குடியிருப்புகளை சூழ்வதை தடுக்க கடந்த 2000ம் ஆண்டு, சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு,  4 மீட்டர் அகலம் கொண்ட திறந்தவெளி கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால்  இந்த கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள்  சரியாக பராமரிக்கவில்லை. இதனால் கால்வாயில் பக்கவாட்டு சுவர்கள் பல இடங்களில்  உடைந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள்  நிலைதடுமாறி கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. உடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று மாதவரம் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பினர்  பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், கால்வாய் சுவர் உடைபட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனரே தவிர அங்கு சுவர் அமைக்கவில்லை. இதனால் எஞ்சியுள்ள சுவர்களும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த மழைநீர் கால்வாயில் குடியிருப்புகளின் கழிவுநீர் விடப்படுகிறது. மேலும் ரெட்டேரி மற்றும் பூம்புகார் நகர் பகுதிகளில் உள்ள கழிவு நீரேற்று நிலையத்திலிருந்து கழிவுநீரை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளே நேரடியாக இந்த கால்வாயில் விடுகின்றனர். இதனால் இந்த மழைநீர் கால்வாய் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பல்வேறு தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக இந்த பழுதடைந்த மழைநீர் கால்வாயை சீரமைத்து கழிவுநீர் விடப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

ஆபத்தான மின்கோபுரம்

இந்த மழைநீர் கால்வாய் மத்தியில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாங்கும் ராட்சத இரும்பு கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் கீழே இரும்பு துருபிடித்து பழுதடைந்து உள்ளது. இதனால் சற்று காற்று வேகமாக அடித்தால்  இந்த இரும்பு கோபுரம் முறிந்து  கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : canal ,area ,motorists ,Ponniyammannu ,Madhavaram ,
× RELATED திருநகரி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைப்பு