உள்ளே நுழைந்ததை கவனிக்காமல் கதவை மூடியதால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் 3 நாய்க்குட்டிகள் இறந்த பரிதாபம்

தாம்பரம்: மேற்கு தாம்பரம், கோவிந்தராஜன் தெருவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் நாய்க்குட்டிகள் சில உள்ளே சென்றுள்ளன. இதனை, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கவனிக்காமல் ஷட்டரை மூடியுள்ளனர். இதனால், உள்ளே இருந்த நாய்க்குட்டிகள் உணவு கிடைக்காமலும், மூச்சுத்திணறியும் தவித்துள்ளன. இந்நிலையில், நேற்று இரவு இந்த ஷட்டர் வழியாக கடும் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஷட்டரை திறந்து பார்த்தபோது, அங்கு ஒரு நாய்க்குட்டி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. மேலும் உள்ளே படிக்கட்டில் ஏறி சென்று பார்த்த போது அங்கே 2 நாய்க்குட்டி இறந்த நிலையிலும், மற்றொரு நாய்க்குட்டி இறக்கும் நிலையிலும் இருந்தது. அவற்றை அகற்றினர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது ‘எங்களது அலுவலகத்தில் நாய்க்குட்டிகள் வந்தது குறித்து எங்களுக்குத் தெரியாது,’ என்றனர். அதற்குள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் ஓட்டுநர் என கூறப்படும் சிலர் பத்திரிகையாளர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி பொதுமக்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Related Stories: