போரூர் அருகே துணிகரம் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: போரூரில் உள்ள ஏடிஎம்மில் ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் தப்பியது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை போரூர் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் கர்நாடகா வங்கி மற்றும் அதன் ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்த ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள், மெஷினை உடைக்க முயன்றனர். சிசிடிவி பதிவின் மூலம் இந்த தகவல் வங்கியின் ஐதராபாத் தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போரூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. பணம் வைக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அதில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பணம் தப்பியது.

Advertising
Advertising

இந்த தகவல் பரவியதால் ஏடிஎம் முன் மக்கள் திரண்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மெஷினை பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஐயப்பன்தாங்கல் அருகே உள்ள நூம்பல் பகுதியில் தனியார் ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் ராமாபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை காஸ் வெல்டிங் வைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: