கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமீறும் வியாபாரிகள் ரசாயனம் தெளித்த காய்கறி, பழங்கள் விற்பனை அமோகம்

* கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை

* நோய் பாதிப்புக்கு ஆளாகும் பொதுமக்கள்
Advertising
Advertising

அண்ணாநகர்: சென்னை கோயம்பேட்டில் 295 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 1000 மொத்த விற்பனை கடைகள் மற்றும் 2 ஆயிரம் சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்ச், திராட்டை, கிவி போன்ற பழங்கள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. அதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பல வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தினசரி இங்கு வந்து தங்களது கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இங்குள்ள மொத்த விற்பனை கடைகளில் விலை குறைவு என்பதால் பண்டிகை காலம், விஷேச நாட்கள் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்களும் இங்கு வந்து காய்கறி, பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், எப்போதும் கோயம்பேடு மார்க்கெட் பரபரப்பாக காணப்படும்.

வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பழங்கள் பாதி பழுத்த (செங்காய்) நிலையில் இருக்கும். இவை இயற்கையாக பழுக்க சில நாட்களாகும். ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில வியாரிகள் பழங்களை உடனே பழுக்க வைக்க வேண்டும் என்பதால், ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு கற்கள், வாழைப்பழங்களை பழுக்க வைக்க எத்திலின், ஆப்பிள் பழம் பளபளப்பாக இருக்க மெழுகு என அனைத்து பழங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல், காய்கறிகளின் நிறம், பளபளப்பு உள்ளிட்வைக்கும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு பச்சை பட்டாணி அடர் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதால் சாயப்பவுடர் பயன்படுத்தப்படுகிறது. ரசாயன பொருளில் இருந்து வெளியாகும் வெப்பத்தால் பழங்கள் விரைந்து பழுத்துவிடும். இந்த பழங்களை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால், கேன்சர் வரவும் வாய்ப்புள்ளது, என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு செயற்கையாக பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்வதற்கு அரசு தடை செய்துள்ளது. ஆனாலும், இதுபோன்ற சுகாதாரமற்ற பழம், காய்கறிகளை வியாபாரிகள் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு நடத்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெயரளவுக்கு சில வியாபாரிகளிடம் இருந்து சுகாதாரமற்ற பழங்களை பறிமுதல் செய்தாலும், தொடர்ந்து இதுபோன்ற விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரசாயனம் பயன்படுத்தாமல் எந்த பழங்களும் விற்பனை செய்வதில்லை என்ற நிலை தற்போது உள்ளதால், பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்ற நிலை மாறி, தற்போது பழங்கள் சாப்பிட்டால் நோய் பாதிப்புக்கு ஆளாகும் அவலம் உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு பழங்களை கொடுப்பதற்கே அச்சமாக உள்ளது. தினசரி பயன்படுத்தும் வாழைப்பழங்களை ரசாயனத்தில் பழுக்க வைப்பதால், அதை வாங்கி பயன்படுத்துபவர்களின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. லாப நோக்கில் செயல்படும் இதுபோன்ற சில வியாபாரிகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் பயன்படுத்தி காய்கறி, பழங்கள் விற்பதை முற்றிலும் தடை செய்யவும், தடையை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு துணை போகும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்,’’ என்றனர்.

வெளியில் தெரியாது

சிறு பாக்கெட்டில் வரும் எத்திலின்  ரசாயன பொடியை, தண்ணீரில் கரைத்து, பழங்கள் மீது தெளிக்கின்றனர். இந்த  பொடியில் இருந்து எந்த வாசனையும் வருவதில்லை. இதனால், பழங்கள் செயற்கையாக  பழுக்க வைத்துள்ளதை கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த பழங்களை சாப்பிடுபவர்களுக்கு  அதிகளவில் உடல்நல பாதிப்பு ஏற்படும். ‘கால்சியம் கார்பைடு’  ரசாயன கல் பயன்படுத்த தடை உள்ளதுபோல், எத்திலின் பயன்படுத்தவும் தடை  உள்ளது. ஆனால், தடையை மீறி, ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள்  கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாதம்தோறும் கமிஷன்

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் பயன்படுத்தி பழங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். காரணம், மாதம்தோறும் அனைத்து கடைகளில் இருந்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கமிஷன் சென்று விடுகிறது.  அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதற்கு முன்பே சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு  தகவல் சென்றுவிடுவதால், ரசாயனம் மற்றும் அதன் மூலம் பழுக்க வைத்த பழங்களை  மறைத்து விடுகின்றனர். சோதனையின் போது  சிக்கும் கடைக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,  தொடர்ந்து இதுபேன்று சுகாதாரமற்ற பழங்கள் விற்பனை தொடர்கிறது.

Related Stories: