×

அடகு கடையில் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி

சென்னை. டிச.10: திருப்போரூர் அருகே அடகு கடையில் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரியில் வசித்து வருபவர் விமல்சந்த் ஜெயின் (45). இவர், திருப்போரூர் - கூடுவாஞ்சேரி சாலையில் நெல்லிக்குப்பம் பகுதியில், கடந்த 20 வருடங்களாக அடகு கடை நடத்தி வருகிறார். அதனுடன் சிறிய அளவில் நகை கடையும் நடத்தி வருகிறார். நெல்லிக்குப்பம், அகரம், கீழூர், தர்மாபுரி, அம்மாப்பேட்டை, காட்டூர், கல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், தங்களது நகைகளை இவரது கடையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் விமல்சந்த் கடையில் இருந்தபோது, முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு, பைக்கில் வந்த 3 வாலிபர்கள், கடையின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு, திடீரென கடைக்குள் நுழைந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமல்சந்தை மிரட்டி பணம், நகைகளை கேட்டனர்.

சுதாரித்துக் கொண்ட விமல்சந்த், தனது இருக்கையின் அருகே பொருத்தி வைத்திருந்த அலார பட்டனை அழுத்தினார். சத்தம் கேட்டு அருகிலுள்ள கடைகளில் அமர்ந்திருந்தவர்கள் அடகு கடையை நோக்கி ஓடி வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத 3 பேரும், பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். உடனே திருப்போரூர் மற்றும் காயார் போலீசாருக்கு இதுபற்றி தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட ஓ.எம்.ஆர்., இசி.ஆர். பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்துள்ளது. பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையின்போது தாழம்பூர் காவல் நிலைய எல்லையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று கடந்த மாதம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். தற்போது நெல்லிக்குப்பம் அடகு கடையில் 3 வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியில் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்வது யார், வட மாநில கொள்ளையர்களா அல்லது உள்ளூர் கொள்ளை கும்பலா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

2 முறை முயற்சி

கொள்ளை முயற்சி நடந்த அடகு கடையில் ஏற்கனவே 2 முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒருமுறை சுவரை துளை போட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இதையடுத்து கேமரா, அலாரம் போன்றவற்றை பொருத்தினார். பின்னர் மற்றொரு முறை கொள்ளை முயற்சியில் அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : pawn shop ,
× RELATED திருவல்லிக்கேணி அடகு கடையில் 4.25 கிலோ...