×

பெரியபாளையத்தில் சேறும் சகதியுமான அரசு மருத்துவமனை சாலை

ஊத்துக்கோட்டை, டிச. 10:  குண்டும், குழியும், சேறும், சகதியுமாகக் காணப்படும் பெரியபாளையம் அரசு மருத்துவமனை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச்சுற்றி ஆத்துப்பாக்கம், அரியப்பாக்ககம், தண்டுமாநகர், ராள்ளபாடி என 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.  இங்குள்ள மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது பிரசவத்திற்கோ பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே நெல்வாய் கிராம சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் இந்த சாலையில் மாணவர்களுக்கான விடுதியும், மாணவிகளுக்கான விடுதியும், அரசு கால்நடை மருத்துவமனை ஆகியவை உள்ளது. மேலும் பவானி அம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் இந்த நெல்வாய் சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை தற்போது பெய்த மழையால் மழைநீர் தேங்கி  குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் மாறியுள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் மக்களும், பக்தர்களும் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள நெல்வாய் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாணவர்கள் விடுதி, கால்நடை மருத்துவமனை ஆகியவைகள் உள்ளன.  இந்நிலையில் இந்த சாலையில் மழைநீர் தேங்கி, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் நெல்வாய், பாளேஸ்வரம், முக்கரம்பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் இந்த சாலையை கடக்கும் போது மிகவும் சிரமத்தோடு  செல்லவேண்டியுள்ளது. மருத்துவமனைகளிலிருந்து செல்லக்கூடிய நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Hospital Road ,
× RELATED ஏனம்பாக்கம் கிராமத்தில் சேறும்...