×

மழை நீர் வடியாததால் கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் கிராம மக்கள் கடும் அவதி

திருப்போரூர், டிச.10: சென்னையை ஒட்டிய வளர்ந்து வரும் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், சாத்தங்குப்பம் கிராமம் கனக பரமேஸ்வரி நகர், நகர், அஜீத் நகர், சொக்கம்மாள் நகர், சீனிவாசா நகர், சண்முகா நகர், குமரன் நகர், சாமுண்டீஸ்வரி நகர் உள்பட 25க்கும் மேற்பட்ட வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன. இந்த பகுதிகளில் முறையான சாலைகள், கால்வாய்கள் இல்லை. இதனால், சமீபத்தில், பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழைநீர் வெளியேற வழியில்லாமல், காலியாக உள்ள மனைகளிலும், காலி இடங்களிலும் சாக்கடை போல் தேங்கி நிற்கிறது. இதில், பாசி படர்ந்து கழிவுநீராக மாறியதுடன், கடும் துர்நாற்றம் வீசி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெளியேறும் கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியுள்ளதாலும், வீராணம் சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு விட்டதாலும் தேங்கிய மழைநீர் வெளியேறவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்குள்ள வீராணம் சாலையை ஓட்டியுள்ள காலி மனைகளில் ஏராளமான இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. குடியிருப்புகள் இருந்தாலும் போதிய வருவாய் இல்லாததால், கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தால் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம், கேளம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய வீராணம் சாலை மற்றும் சாத்தங்குப்பம் கிராம புதிய குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kelambakkam ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!