×

பொதுப்பணித் துறை அலட்சியத்தால் குப்பை கிடங்காக மாறிய புதுப்பாக்கம் ஈசா ஏரி

திருப்போரூர், டிச.10: கண்டு கொள்ளாத பொதுப்பணித் துறையினரால், புதுப்பாக்கம் ஏறி, குப்பை கிடங்காக மாறிவிட்டது. அதில், குப்பைகளை கொட்டி, ஊராட்சி நிர்வாகம் ெதாற்று நோய்களுக்கு வழிவகை செய்து வருகிறது. திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம்,  ஊராட்சி வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது. சிறுசேரி  மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை ஒட்டி இந்த ஊராட்சி அமைந்துள்ளதால், அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது. இதையொட்டி, இந்த ஊராட்சியில் ஏராளமான  வீட்டுமனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பள்ளிகள்  உருவாகியுள்ளன. மக்கள் தொகையும் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த வளர்ச்சியும்  ஏற்படவில்லை. மக்கள் தொகை பெருக்கத்தால், இந்த ஊராட்சியில்  திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய ஊழியர்கள்  இல்லாததால், இருக்கும் ஊழியர்களுக்கு குப்பைகளை உரமாக்கும் திட்டம் பற்றிய  போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், ஊராட்சி மக்களிடம்  இருந்து குப்பைகளை சேகரித்து உரமாக மாற்றும் திட்டம் தோல்வியடைந்தது.

புதுப்பாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், தாங்கள்  சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் புதுப்பாக்கத்தின் முக்கிய  நீராதாரமாக விளங்கும் ஈசா ஏரியில் கொட்டுகின்றனர். மேலும், புதுப்பாக்கம்  கிராமத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட இடிபாடுகள்,  மரங்கள், கோழி, ஆடு இறைச்சி கழிவுகள் ஆகியவையும் ஏரிக்குள்  கொட்டப்படுகின்றன. இதற்கு இந்த ஊரை ஒட்டி அமைந்துள்ள கேத்தரின்  அவென்யு, லட்சுமி அவென்யு, ஜஸ்ராஜ் நகர், சாய் கேர் இந்தியா காலனி, நல்ல  தண்ணீர் குளம், கன்னியம்மன் கோயில் தெரு, பெரியார் நகர் உள்பட பல்வேறு  குடியிருப்புகளில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், கலெக்டர் ஆகியோரிடம்  புகைப்படங்களுடன் புகார்கள் அனுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

ஏரியில் கொட்டப்படும் குப்பைகளை மாடு, பன்றி,  நாய் ஆகியவை கிளறி அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மர்மநபர்கள் சிலர், அனைத்து  கழிவுப் பொருட்களும், பிளாஸ்டிக் கழிவுகளோடு சேர்த்து தீ வைத்து  எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் நோய்,  இருமல், மூச்சு திணறல், சுவாச கோளாறு உள்பட நோய்கள் ஏற்படுவதோடு, குடியிருப்பு பகுதி புகை மண்டலமாக  காணப்படுகிறது.
மேலும், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் திடக்கழிவு  மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஒதுக்குப்புறமான இடத்தை ஒதுக்க  வேண்டும் என கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் இல்லாத நிலையே உள்ளது. எனவே, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம், புதுப்பாக்கம் ஊராட்சி நிர்வாகமும் இணைந்து  புதுப்பாக்கம் ஈசா ஏரியை சீரமைக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வருவாய்த் துறை உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும். நிலத்தடி நீர் மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Public Works Department ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...