×

கழிவுநீர் கலந்து கூவமாக மாறிய அவலம் சிவகாசியில் குப்பை எரிப்பால் கண் எரிச்சல்

சிவகாசி, டிச. 9: சிவகாசியில் முக்கிய இடங்களில் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்றாமல், ஆங்காங்கே நகராட்சி பணியாளர்கள் எரிப்பதால் புகை மண்டலம் உருவாகி பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள 4 சுகாதார ஆய்வாளர்கள், 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளனர். ஆனால், நகராட்சியில் நடக்கும் சுகாதாரப் பணிகள் முறையாக நடப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளரும் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இதனால், நகராட்சியில் எங்கு பார்த்தாலும் ஒரே குப்பையாக உள்ளது. வாறுகால்களை தூர்வாருவதில்லை. வீடுகளில் தினசரி குப்பை சேகரிக்கும் பணிகள் முறையாக நடப்பதில்லை.
நகரில் உள்ள தட்டாவூரணி, மணிநகர், நேசனல் காலனி, மருதுபாண்டியர் நகர், பள்ளபட்டி ரோடு, உசேன் காலனி, அண்ணா காலனி, வாட்டர் டேங்க் ஆகிய இடங்களில் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. இவைகளை அகற்றுவதற்கு பதிலாக, நகராட்சி பணியாளர்கள் அங்கேயே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், திருத்தங்கல் ரோடு, திருவில்லிபுத்தூர் ரோடு, விளாம்பட்டி ரோடு ஆகிய இடங்களில் எப்போதும் ஒரே புகை மண்டலமாக உள்ளது. இந்த சாலைகள் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர். முதியோர்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, நகராட்சியில் குப்பைகளை தினசரி அகற்றி, வாறுகால்களை தூர்வார நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...