×

கரை உடைப்பு பணி நிறைவு 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

தேனி, டிச.9: வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் ஆண்டிபட்டி அருகே கால்வாய் கரை உடைந்த பகுதி சீரமைக்கப்பட்டதையடுத்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரினைக் கொண்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 58ம் கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டது. இக்கால்வாயில் கடந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 68 அடியை தாண்டியுள்ளதால் 58ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்து போராட்டங்கள் நடத்தினர்.இதனையடுத்து கடந்த 5ம் தேதி காலை வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்க்கான மதகுகள் மூலமாக வினாடிக்கு 100 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக தண்ணீர் சென்ற நிலையில், நேற்று முன்தினம் காலை ஆண்டிபட்டி அருகே டி.புதூர் பகுதியில் 58ம் கால்வாய் கரைஉடைந்தது. இதனையடுத்து, திறந்து விடப்பட்ட தண்ணீர் உடைந்த பகுதிவழியாக வீணாக வெளியேறி பாசன நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

இதனையடுத்து பொதுப்பணித் துறையினர் கரை உடைப்பினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் மதகுகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் 58ம் கால்வாய் கரை உடைப்பு ஏற்பட்ட டி.புதூர் பகுதிக்கு வந்து கரை உடைப்பினை சீரமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். இதனையடுத்து சீரமைப்பு பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு பணிகள் முடிவடைந்தது.நேற்று வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்க்கு வினாடிக்கு 50 கனஅடி நீர் தொடங்கி வினாடிக்கு 80 கனஅடிநீர் என சிறிது, சிறிதாக அதிகரித்து நேற்று மாலை முதல் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது