×

இ ந் த நா ள் நிற்காமல் சென்ற அரசு பஸ்: மறியலால் பரபரப்பு

சாயல்குடி, டிச.9: சாயல்குடி அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாயல்குடி-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ளது மேலச்செல்வனூர் கிராமம். இங்கு 800க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு உயர்நிலைப்பள்ளி, பறவைகள் சரணாலயம் உள்ளன. இந்த ஊர் பஸ் ஸ்டாப் அமைந்துள்ள இந்த வழித்தடத்தில் கிழக்கு கடற்கரை சாலை செல்வதால் அனைத்து நிலை பஸ்களும் வந்து செல்கிறது. ஆனால் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. மற்ற பஸ்கள் நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிராமமக்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டல போக்குவரத்து கிளை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலச்செல்வனூர் பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனை ஏற்று அதிகாரிகளும் பஸ் நின்று செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் பஸ்களை ஓட்டுனர், நடத்துனர்கள் வழக்கம் போல் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன்(70) என்பவர் சாயல்குடி சென்று விட்டு ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் ஒன்றில் மேலச்செல்வனூருக்கு வந்துள்ளார். மேலச்செல்வனூர் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடாமல் 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கீழச்செல்வனூர் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், மழையில் நனைந்த படி காத்தவராயன் மேலச்செல்வனூருக்கு சாலையோரம் நடந்து வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கீழச்செல்வனூர் போலீசார் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  கொண்டுச் சென்றனர்.

இந்நிலையில் மேலச்செல்வனூர் பஸ் ஸ்டாப்பில் பேருந்தை நிறுத்தி இருந்தால் முதியவர் இறந்திருக்க மாட்டார். எனவே மேலச்செல்வனூர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்தாமல் சென்ற அரசு பஸ் ஓட்டுனர், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுனர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இன்று முதல் அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  கிராமமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த முதுகுளத்தூர் டி.எஸ்,பி ராஜேஸ், கடலாடி தாசில்தார் முத்துக்குமார், ராமநாதபுரம் போக்குவரத்து கிளை மேலாளர் ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வார காலத்திற்கு இந்த ஸ்டாப்பில் ஒரு டிக்கட் பரிசோதகர் பணியில் இருப்பார் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை