×

விலை உயர்வால் மகிழ்ச்சி வெங்காயம் அழுகியதால் அதிர்ச்சி நிவாரணம் வழங்க விவசாயி வலியுறுத்தல்

வத்தலக்குண்டு, டிச. 9: வத்தலக்குண்டு அருகே வெங்காய விலை உயர்ந்ததால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயி வெங்காயத்தை பறித்தபோது அழுகியிருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இவர் அங்குள்ள அவரது தோட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் வாழை போட்டிருந்தார். குலை தள்ளிய நேரத்தில் சூறாவளி வீசி மரங்கள் சாய்ந்தன. இதனால் வாழை விவசாயத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதுஅதன் பிறகு அந்த நிலத்தில் இரண்டு ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டிருந்தார். தற்போது விலை அமோகமாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வயலில் பத்து பெண்கள் வெங்காயம் பறிக்க தொடங்கினர்.

வெங்காயம் பெரும்பாலானவை அழுகிய நிலையில் இருந்தது. இதனால் மகிழ்ச்சி பறிபோய் அதிர்ச்சியடைந்தார். தோட்டம் முழுவதும் அதே போல் இருந்தது. தொடர் மழையால் ஏற்பட்ட அழுகலா அல்லது அழுகல் நோயா என்று தெரியாமல் தொடர்ந்து பறித்தனர். அப்போது திடீரென்று மழை பெய்து வேதனையை அதிகப்படுத்தியது. கொட்டும் மழையிலும் கடைசி வரை குடும்பத்தினரும் கூடவே காவல் இருந்து வெங்காயத்தை பறித்தனர். ஆனால் வெங்காயம் அழுகிய நிலையில் இருந்ததால் விவசாயி சோகத்தில் மூழ்கினார்.இதுகுறித்து விவசாயி பிச்சை கூறுகையில், ‘எதிர்பார்த்த மகசூலில் கால் வாசியே கைக்கு கிடைத்தது. வாழையில் இழந்ததை வெங்காயத்தில் மீட்டி விடலாம் என்று நினைத்தேன். வாழை சூறாவளியாலும், வெங்காயம் மழையாலும் பாதிப்படைந்துவிட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED செல்போனுக்கு சார்ஜ்போட்ட போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி