×

அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம்

திருப்பூர், டிச.9: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகம் முறையான பராமரிப்பின்றி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை தாராபுரம் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். ஏழை எளிய பாமர மக்கள் பயன்பெறுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் திறப்பு விழா செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த உணவகம் உரிய பராமரிப்பின்றி செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் உள்ள முன்பக்க சுவர்கள் உடைந்து இடிந்து விழும் சூழலில் உள்ளது. மேலும் இந்த அம்மா உணவகத்திலுள்ள சமையலறை மோசமாகவும் மற்றும் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் துருப்பிடித்தும் காணப்படுகின்றது. மேலும் உணவகத்தில் தயிர் வைப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதனப்பெட்டிகள் முழுவதும் துருப்பிடித்து காணப்படுகிறது. மேலும் இங்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்படுவதாக இங்கு சாப்பிட வரும் பொதுமக்கள், நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த உணவகம் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த உணவகத்தில் சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ் கற்கள் உடைந்து விழும் சூழலில் உள்ளது. இதனால் இங்கு அமர்ந்து உணவுகள் உண்பதற்கு ஏதுவான சூழல் இல்லாத நிலை நீட்டிக்கிறது.  மேலும் இங்கு கை கழுவும் பேஷன் துருப்பிடித்து காணப்படுகிறது. பல நூறு பொதுமக்கள் பயன்படுத்த கூடிய அம்மா உணவகத்தின் அவல நிலையை அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளனர்,’’ இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது, ‘‘திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்குள் இருக்கும் அம்மா உணவகம் 4 வது மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் வருகிறது. இந்த அம்மா உணவகத்தின் பராமரிப்பு பணிகள் குறித்து உடனடியாக சரி செய்ய உத்தரவிடுவதாகவும்,’’ கூறினார்.

Tags : Mother's Hospital on Government Hospital Campus ,
× RELATED அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள...