புதிய ஆர்டர்கள் இல்லாததால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை

திருப்பூர், டிச.9: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு சீனா மிகப்பெரிய போட்டி நாடாக இருந்து வருகிறது. சீன நிறுவனங்கள், குறைந்த செலவில் ஆடை தயாரித்து, குறைந்த விலைக்கு சந்தைப்படுத்துகின்றன. அதை எதிர்கொண்டு, ஆர்டர்களை பெறுவது, நம் நாட்டு ஆயத்த ஆடை துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. சீன ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இயற்கைக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதில், துணிகளுக்கு சாயமேற்றும் சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்களும் அடங்கும். அந்நாட்டில், சாயக்கழிவு நீரை முழுமையாக சுத்திகரிக்கும் கட்டமைப்புகள், இதுவரை உருவாக்கப்படவில்லை. இதுவே, தற்போது அந்நாட்டு ஆடை உற்பத்தி துறைக்கு சோதனையை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த, 2011ல், திருப்பூர் சாய ஆலை துறையினரும் இதுபோன்ற நெருக்கடியை சந்தித்தனர். ஆனால், சாயக்கழிவு நீரை, ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கி, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி விட்டனர். திருப்பூரில் மட்டும் தான், சாய தண்ணீரை முழுமையாக சுத்திகரிக்கும், பூஜ்ய சுத்திகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன. சீனாவில், 377 சாய ஆலைகளை மூடுவதற்கு, அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இயற்கையை பாழ்படுத்தும் தொழிற்சாலைகள் குறித்து சமீபத்தில் அந்நாட்டு அரசு ஆய்வு செய்தது. இதில் சாயபட்டறை, பிரிண்டிங், தோல், ரப்பர் உட்பட பல்வேறு தொழி்ற்சாலைகளை கண்டறிந்தனர். முதற்கட்டமாக சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் சாய கழிவு நீர் நிலத்தடி நீர், மண் ஆகியவற்றை பாழ்படுத்தி விவசாய விளைநிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதைதொடர்ந்து சீனாவில் 377 சாய ஆலைகள் இயங்க தடை விதித்துள்ளனர். சீனாவில் சாய ஆலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முழுமையாக கடைபிடிக்கும்போது சாய கழிவு நீரை சுத்திகரிப்புசெய்ய கூடுதல் செலவிடவேண்டியுள்ளது. துணிகளுக்கு சாயமிடும் கூலி அதிகரிக்கும் போது ஆடைகளின் விலையும் அதிகரிக்கிறது. இருந்தும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறுகையில்: சீனாவில் உள்ள சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் சாய கழிவு நீரை சுத்திகரிப்புசெய்து வெளியேற்ற வேண்டுமென சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதைதொடர்ந்து சீன ஆடைகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. சீன ஆடைகளின் விலை அதிகரிப்பை தொடர்ந்து ஒரு சில வியாபாரிகள் வியட்நாம், வங்கதேசம் உட்பட விலை குறைவாக கிடைக்கும்  நாடுகளில் ஆடைகளை கொள்முதல் செய்கின்றனர். சீனாவில் சாய ஆலைகளுக்கு தடை விதிப்பால் இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிகளவு வரவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளாக வியாபார தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு மட்டுமே அதிகளவு ஆடை ஏற்றுமதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: