சூலூர் விமானப்படை தளம் விரிவாக்கம் மேலும் 700 ஏக்கர் கையகப்படுத்த திட்டம்

சூலூர், டிச.9: சூலூர் விமானப் படைத்தளத்திற்கு மேலும் 700 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் என்ற தகவலால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சூலூரில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானப்படை தளம் உள்ளது. இங்கு தேஜஸ் ரக விமானங்கள் உட்பட பல வகையான போர் விமானங்கள் உள்ளன. இதுதவிர, விமானம் பழுது நீக்கும் மையமும் செயல்பட்டு வருகிறது.இந்த விமானப்படை தளத்தை விரிவாக்கம் செய்வதற்காக கோவை மாவட்டத்தில் சூலூர், கலங்கல், அப்பநாய்க்கன்பட்டி, காடம்பாடி மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் கிராமம் உள்ளிட்ட விவசாய நிலங்கள்  சுமார் 300 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளதாக 2012ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இது குறித்த நிலங்களின் விபரம் சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இதனால், மேற்கூறிய கிராமங்களில் குறிப்பிட்ட நிலங்களை பத்திரப் பதிவு செய்வது நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளிவந்து 8 ஆண்டுகளாகியும் நிலத்தை அரசு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

 இதனால், சொந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.இந் நிலையில், விமானப்படை தளத்தில் ராணுவ தளவாடங்கள் கையாள்வதற்காக கூடுதலாக அதே கிராமங்களில் 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால் நிலம் எடுப்பது குறித்த விபரம் வெளியானால் அது குறிப்பிட்ட 5 கிராமங்களில் ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அது குறித்து எந்த தகவலையும் அரசு வெளியிடாமல் இருந்து வருகிறது.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,`இடம் கொடுக்க முடியாது என விவசாயிகள் கூற முடியாது. எங்கள் கோரிக்கை எல்லாம் எவ்வளவு நிலம், எந்தெந்த நிலம் என்பதை தெளிவுபடுத்தி எங்கள் வாழ்நாளிலேயே நிலத்தை கையைப்படுத்திக் கொண்டு அதற்குண்டான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். இதனால், பூமி மற்றும் சொத்துக்கள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் அதிருப்தியில் உள்ளோம்’ என்றனர்.

Related Stories: