×

மகுடஞ்சாவடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தம்

இளம்பிள்ளை, டிச.9:  சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடியில் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் மேம்பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சேலத்தில் இருந்து ஈரோடு, பவானி வழியாக கோவை, திருப்பூர், கேரளா ஆகிய ஊர்களுக்கு, மகுடஞ்சாவடி வழியாக, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதிவேக வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட்டது. இதையடுத்து, மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் ₹45 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணியை, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். ஆரம்பத்தில் பணிகளை விரைவாக செய்தவர்கள், சாலையில் இருபுறமும் 10 தூண்களை அமைத்தனர். அதன்பின் பணிகளை நிறுத்தி விட்டனர். இதனால், சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

 இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் உள்ளன. பாலம் பணிக்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டதால்,   கொங்கணாபுரம், இடைப்பாடிக்கு செல்லும் வாகனங்கள் வாகனங்கள் அனைத்தும், அரை கி.மீ தூரம் சென்று திரும்பி வரவேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bridge ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...