மாவட்டம் முழுவதும் 4,299 உள்ளாட்சி பதவிக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு

சேலம், டிச.9: சேலம் மாவட்டத்தில் 4,299 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் இன்று(9ம் தேதி) காலை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தற்போது ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 385 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலில், 16,04,789 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஊரக வளர்ச்சித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(9ம் தேதி) தொடங்குகிறது. இதன்படி, கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலை நடத்த 4 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் (இணை இயக்குநர்), 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் (உதவி இயக்குநர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், 20 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கான தேர்தல் மற்றும் 385 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தலை நடத்த, உதவி இயக்குநர் பொறுப்பில் உள்ள 20 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், பிடிஓ, தாசில்தார் பொறுப்பில் உள்ள 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 385 கிராம ஊராட்சி மன்றத்தில் உறுப்பினர் பதவிக்கான தேர்தலை நடத்த 385 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், அந்தந்த கிராம ஊராட்சி மன்றங்களில் வேட்புமனுக்களை பெறுவார்கள். வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை கொடுக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு வரும் 16ம் தேதி கடைசிநாள். 17ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 18ம் தேதி வாபஸ் பெற கடைசி நாளாகவும், அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் ஊரக வளர்ச்சித்துறை செய்துள்ளது. முதல்நாளில் சுயேட்சைகள் அதிகளவு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

Related Stories: