×

சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்வதால் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு

நாமக்கல், டிச.9: நாமக்கல் நகரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடந்து  வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்க உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோல், நாமக்கல் நகரில் கொடி கட்டி பறக்கும் தடை செய்யப்பட்ட போதப்பொருட்கள் விற்பனையை தடுப்பதில் திடீர் ஆர்வம் காட்டிய நாமக்கல் போலீஸ் அதிகாரிகள், தற்போது போதைப்பொருட்கள் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
கடந்த இரு மாதத்துக்கு முன்பு நாமக்கல் கடை வீதியில், திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார், ராஜஸ்தான் மாநில வியாபாரிகளின் கடையில் இருந்து ₹5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை கைப்பற்றினர். விற்பனையாளர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், கடந்த வாரம் கடை வீதியில் உள்ள ஒரு ஸ்டோரில் சோதனை செய்த போலீசார், கடை உரிமையாளர் மீது சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து விடுவித்து விட்டனர்.இதேபோல், துறையூர்ரோட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த நபர் மீதும் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விட்டு விட்டனர். போலீசாரின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால், நகரில் மீண்டும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

அதுவும் குறிப்பிட்ட பெரிய கடைகளில் மட்டும் தான் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய போலீசார் மறைமுகமாக அனுமதி அளிக்கிறார்கள். சிறிய கடை உரிமையார்களை போலீசார் அச்சுறுத்தி வருவதால், அவர்கள் போதைப்பொருட்கள் விற்பனையை நிறுத்திவிட்டனர். இதனால், மொத்த விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து சில்லறை வியாபாரிகள் கூறுகையில், அதிகாலை நேரங்களில் பால் பாக்கெட் போடுவது போல குறிப்பிட்ட சில கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனைக்கு வருகிறது. நகரையொட்டியுள்ள கடைகளில் தான் தற்போது அதிகமாக பான்பராக், குட்கா, பான்மசாலா போன்றவை விற்பனையாகிறது. அங்கிருந்து தான் நகரில் உள்ள வியாபாரிகளும் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் அனைவர் மீதும் போலீசார் உரிய முறையில் வழக்குப்பதிவு செய்வதில்லை என்றனர்.


Tags :
× RELATED நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர்...