×

இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு புதிய பரிந்துரை லாரிகளுக்கு இழப்பீடு பெறுவதில் சிக்கல்

நாமக்கல், டிச.9: மோட்டார் வாகன சட்டத்தில், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு புதிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து லாரிகளுக்கு இழப்பீடு பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். இதுதொடர்பாக நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான வாங்கிலி தலைமை வகித்தார். கூட்டத்தில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவர பரிந்துரை செய்துள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் லாரி உரிமையாளர்களை பாதிக்கும் பல்வேறு புதிய விதிமுறைகள் குறித்து தலைவர் வாங்கிலி, சங்க நிர்வாகிகளுக்கு விளக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுக்கு மேலாக லாரி தொழில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. 3ம் நபர் விபத்து காப்பீடு பிரிமியம் ஏற்கனவே உயர்த்தப்பட்டு விட்டது. தற்போது, இந்த தொழிலை நசுக்கும் வகையில் புதிய விதிமுறைகளை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவர பரிந்துரைத்துள்ளது. அதன்படி, எதிர்பாராவிதமாக லாரி விபத்துக்குள்ளானால், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் அளிக்க 24 மணி நேரம் மட்டுமே காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான வாகனத்தை பழுது பார்க்கும்போது, உதிரிபாகங்கள் மாற்றினால், அதற்கான தேய்மானம் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டோட்டல் லாஸ் என்ற முறையில் விபத்தில் சிக்கிய லாரியை செட்டில் செய்யும்போது, வண்டியின் ஆர்.சி.யை சரண்டர் செய்தால் தான் முழு இழப்பீடு கிடைக்கும். பாலிஸி எக்ஸஸ் தொகை தற்போது ₹1500 ஆக உள்ளது. ஆனால், புதிய சட்டத்தில், அதிகபட்சம் ₹40 ஆயிரம் வரை பிடித்தம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுதொடர்பான அனைத்து லாரி உரிமையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.இவ்வாறு வாங்கிலி தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த சர்வேயர்கள் பேசுகையில், தற்போதைய மோட்டார் வாகன சட்டப்படி எப்.சி., டிரைவிங் லைசன்ஸ் மட்டுமே முக்கிய ஆவணங்களாகும். ஆனால் புதிய விதிமுறையில், சட்டத்தில் உள்ள அனைத்து ஷரத்துக்களும் சரியாக பின்பற்றினால் தான் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறமுடியும் என்றனர்.கூட்டத்தில், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் சீரங்கன், உதவித் தலைவர் மணி(எ)சுப்புரத்தினம், செயலாளர்(பொ) மயில்ஆனந்த், நாமக்கல் ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், உதவித் தலைவர் தாமு, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன், பொருளாளர் அம்மையப்பன், லாரி சங்க செயற்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், காளிமுத்து, நடராஜ், பாண்டியன், ராமதஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : insurance companies ,
× RELATED விவசாய தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை