×

வறட்சியால் கரும்பு சாகுபடி குறைந்தது பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நிறுத்தம்

தர்மபுரி, டிச.9: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டதால், கரும்பு சாகுபடி வெகுவாக குறைந்து, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நடப்பாண்டு இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 25 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் கரும்பு பதிவு செய்து, ஆலை நிர்வாகம் வெட்டி எடுத்த பின்னர், மீதமுள்ள கரும்புகளை, திருவண்ணாமலை செங்கத்தில் உள்ள கரும்பு ஆலைக்கு விவசாயிகள் கொண்டு செல்வார்கள். ஆனால், தற்போது தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து, சுமார் 8 ஆயிரம் ஏக்கர் அளவே உள்ளது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவை காலத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, மல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான டன் கரும்புகளை அரவைக்கு கொண்டு வருவார்கள்.

 தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், முக்கிய இடத்தை இந்த ஆலை வகித்து வந்தது. ஆண்டுக்கு 3.80 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1990களில் இந்த ஆலை 7 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்து சாதனை படைத்துள்ளது. இதற்காக மத்திய அரசிடம் சிறந்த ஆலை, நிர்வாகத்திற்காக விருதும் பெற்றுள்ளது. ஓராண்டு பயிர் என்பதாலும், வெட்டும் வரை கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டி இருப்பதாலும், பல விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி மீதான ஆர்வம் மெல்ல, மெல்ல குறைந்தது. இதனால், ஆலையின் அரவை இலக்கை எட்ட வேண்டிய கரும்பு எடை எண்ணிக்கை, படிப்படியாக டன் கணக்கில் குறைய தொடங்கியது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளாக ஆலை அரவைக்கு பதிவு செய்யப்படும் கரும்பு வெகுவாக குறைந்தது. கடந்த 2014ம் ஆண்டு 2.50 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்ட இந்த ஆலையில், படிப்படியாக ஒரு லட்சம் டன், 50ஆயிரம் டன் என சரிந்து, நடப்பாண்டு மிக சொற்பமாக 20 ஆயிரம் டன் மட்டுமே அரவைக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ஆலை நாளொன்றுக்கு, 2500 டன் அரவை செய்யும் திறன் கொண்டது.

தற்போது பாலக்கோடு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு பதிவு செய்யப்பட்ட கரும்பானது, 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இந்த குறைந்த எண்ணிக்கையில் அரவை நடைபெறுமா அல்லது நடப்பாண்டு அரவை நிறுத்தப்பட்டு, பதிவாகியுள்ள இந்த கரும்பு, இதே மாவட்டத்திலுள்ள அரூர் கோபாலாபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மாற்றம் செய்யப்படுமா என்ற நிலை நீடிக்கிறது. ஆண்டுதோறும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் அரவை பணிகள் தொடங்கி விடும். தற்போது வரை அரவை பணிகள் தொடங்கப்படாததால், நடப்பாண்டு நிச்சயமாக அரவை நிறுத்தம் செய்யப்படும் என்கிற கருத்து விவசாயிகளிடையே நிலவி வருகிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினரும், வாணியாறு பாசன சங்கத்தலைவருமான மொளையானூர் சுப்பிரமணியன் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மாற்று பயிர்களுக்கு மாறினர். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வரவேண்டிய பதிவு கரும்பு வெகுவாக குறைந்தது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, மொத்தம் 3.50 லட்சம் டன் கரும்பு அரவை திறன் கொண்டது. ஆனால், 10 நாட்களுக்கு அரவைக்கு மட்டுமே 20 ஆயிரம் டன் கரும்பு உள்ளது. இதனால் நடப்பாண்டு ஆலை அரவை நிறுத்தப்படுகிறது. இத்தகைய சூழலைத் தவிர்க்க, ஆலையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல சிறப்புத் திட்டங்களை தீட்டி, கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டு ஆலைகளும் ஒருகட்டத்தில் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!