களக்காடு அருகே சுகாதார நிலையம், குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

களக்காடு, டிச.9: களக்காடு அருகே குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.களக்காடு அருகே உள்ள மாவடி உடையடிதட்டில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். உடையடிதட்டில் இருந்து மாவடி புதூர் செல்லும் தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீருடன் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து ஒருவீதமான துர்நாற்றம் வீசுகிறது. இந்த நாற்றத்தால் வீடுகளில் வசிக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். வீடுகளை விட்டு வெளியேறினாலே சாக்கடைக்குள் இறங்கி செல்ல வேண்டியதுள்ளது. இதில் உருவாகும் கொசு மற்றும் பூச்சிகளால் அப்பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. சிறுவர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

Advertising
Advertising

கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதியில் துணை சுகாதார நிலையமும் உள்ளது. இங்கு மாவடி, மாவடி புதூர், செட்டிமேடு, டோனாவூர் மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளும் போடப்படுகிறது. இதற்காக துணை சுகாதார நிலையத்திற்கு வரும் மக்கள் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இறங்கியே வரவேண்டியதுள்ளது, துணை சுகாதார நிலையத்தில் அருகிலேயே சுகாதார சீர்கேடு நிலவுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 6 மாதத்திற்கு முன் இங்கு காங்கிரிட் சாலை அமைத்தனர். அப்போது வாறுகால் அமைக்காமல் விட்டு விட்டனர். அப்பொழுதில் இருந்தே கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் சாக்கடை நீரை அகற்றினோம், ஆனால் மீண்டும் நீர் குளம் போல் தேங்கி விடுகிறது, வாறுகால் அமைப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும்' என்றனர்.

Related Stories: