×

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வஸ்திர மரியாதை

திருச்சி, டிச.9: கைசிக ஏகாதசி விழாவை முன்னிட்டு ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை நேற்று வழங்கப்பட்டது.கி.பி.1320 ரங்கத்தில் நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ரங்கம் கோயில் நம்பெருமாள் திருமலை கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோயிலில் ரங்கநாயகலு மண்டபம் எனும் பெயரில் உள்ளது.  நம்பெருமாள் திருமலையில் இருந்த ரங்கநாயகலு மண்டபத்தில்தான் இக்கோயிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன. திருமலைக்கும், ரங்கத்துக்கும் நீண்ட காலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலபோக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார், ராமானுஜருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதிய வஸ்திரங்கள், புதிய குடைகள் அணிவிக்கப்படும்.இதை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி , நிர்வாக அதிகாரி அனில்குமார்சிங்கால் ஆகியோர் தலைமையில் புதிய வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த வஸ்திர மரியாதை ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க உள் வீதிகளில் ஊர்வலமாக வந்து ரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

Tags : Aurangam Ranganathar ,Tirupati Devasthanam ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...