துறையூர், உப்பிலியபுரம் தா.பேட்டை பகுதிகளில் துவக்கப்பட்டு 3 ஆண்டை கடந்தும் பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் திட்டம்

துறையூர், டிச.9: துறையூர், உப்பிலியபுரம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக 3 ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் காவிரி குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.துறையூர் ஊராட்சி ஒன்றியம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பல பகுதிகளில் நிலத்தடிநீர் உப்பு நீர் கலந்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு காவிரி கூட்டு குடிநீர் 293 திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக முசிறி காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஒவ்வொரு ஊராட்சியிலும் நீர்த்தோக்க தொட்டி அமைத்து, இதன் மூலம் அருகில் உள்ள கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த குடிநீர் திட்டம் 2017ல் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு பணியும் நடக்காமல் ஊராட்சி மக்களுக்கு இந்த திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.

மேலும் துறையூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்டு பாதியிலே பணி ஏதும் நடக்காமல் நீர்த்தேக்க தொட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுபோல தரையில் பதிப்பதற்காக வந்திறங்கிய குழாய்களும் அடுக்கி வைத்தபடி அப்படியே உள்ளது. மேலும் இது வெட்டவெளியில் உள்ளதால் வெயில், மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் துறையூர் ஒன்றியத்தில் 122 கிராமங்களுக்கும், உப்பிலியாபுரம் ஒன்றியத்தில் 77 கிராமங்களுக்கும் மற்றும் தா,பேட்டை, முசிறி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்கும். துறையூர், உப்பிலியபுரம், தா.பேட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் குடிக்கும் குடிநீர் உப்பு கலந்த நீராக இருப்பதால் அடிக்கடி கல் பிரச்னை, உடலில் உப்பு அதிகமாகி கைகால் வீக்கம், சிறுநீரக பாதிப்பு என நோய்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில கிராமங்களில் நல்ல தண்ணீர் எடுப்பதற்காக 5, 6 கி.மீ. வரை டூவீலர்களிலும், நடந்து சென்றும் குடிநீர் எடுத்து வந்து தாகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த பிரச்னை தொடர்ந்து இருப்பதாக கிராம மக்கள் மன வேதனையுடன் கூறுகின்றனர்.

துறையூர் தொகுதி எம்எல்ஏவிடம் இந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கிராமப்புற பகுதிகளுக்கு இன்னும் கொண்டு வராமல் உள்ளது என கூறி காவிரி கூட்டு குடிநீர் விரைவில் வழங்க பொதுமக்கள் மனு அளித்தனர். அதற்கு அவர் சட்டசபையில் இதுபற்றி கேள்வி எழுப்பியும், காவிரி கூட்டு குடிநீர் இயக்குனருக்கு மனு ஒன்றையும் அளித்தார். எம்எல்ஏவிற்கு வந்த பதில் அறிக்கையில் பிப்ரவரி 2019ல் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிந்துவிடும். காவிரி கூட்டு குடிநீர்-293 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் நிறைவடையாததால் மீண்டும் ஜூன் மாதம் மனு அளித்து உள்ளார். இருந்தும் இதுவரை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு விரைவில் இந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து தூய்மையான நீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: