×

குடந்தை சாரங்கபாணி கோயில் சப்பரத்தை பாதுகாப்பாக நிறுத்த விரைந்து ஷெட் அமைக்கப்படுமா?

கும்பகோணம், டிச. 9: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு முன் இரும்பினாலான சப்பரம் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே சப்பரத்தை பாதுகாப்பாக நிறுத்த ஷெட் அமைக்கப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் உள்ளது. இந்த கோயில் ரங்கம், திருப்பதிக்கு இணையான மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது. 108 வைணவ திருத்தலங்களில் இக்கோயில் மட்டுமே மூர்த்தி, திருக்குளம், திருத்தேர், திருவாபரணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்று விளங்குவது வரலாற்று சிறப்புடையது.இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் விழா மற்றும் கருட சேவையின் போதும் கருட வாகனத்தில் சாரங்கபாணி சுவாமியும், சக்கரபாணி சுவாமியும் ஒரே சப்பரத்தில் வீதியுலா வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சப்பரம் இல்லாததால் கட்டுத்தேரில் உற்சவம் நடத்தி வந்தனர். இதையடுத்து பக்தர்கள் நன்கொடையான ரூ. 4 லட்சம் மதிப்பில் 2014ம் ஆண்டு 5 டன் மதிப்பில் இரும்பினாலான சப்பரம் செய்தனர். அதன் பின்னர் சாரங்கபாணி சுவாமி மற்றும் சக்கரபாணி சுவாமிகள் வீதியுலா நடந்து வருகிறது. இந்த சப்பரம் செய்து வந்த நாட்களிலிருந்து 5 ஆண்டுகளாக கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாமலும், மழை மற்றும் வெயிலில் நிற்பதால் இரும்பினாலான சப்பரம் வீணாகும் நிலை உருவாகி வருகிறது.இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்தவிதமான பலனும் இல்லாமல் உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சப்பரத்தின் ஸ்திர தன்மை குறைந்து வருகிறது.இதனால் ரூ.4 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட சப்பரம் வீணாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், புகழ்பெற்ற சாரங்கபாணி சுவாமி கோயில் முன்புள்ள இரும்பினாலான சப்பரத்துக்கு ஷெட் அமைத்து மழை, வெயில் படாமல் பாதுகாக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : rush ,Kundantai ,shelter ,Sarangapani Temple ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து