×

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.9: புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே உள்ள இடத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்த மழைநீர் பல நாட்களாக ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால், அதில் பாசி படர்ந்து தற்போது தூர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. மேலும் இவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீரில் அப்பகுதியில் சேரும் குப்கைகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோல புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பிரகதாம்பாள் நகர், பெரியார்நகர், வடசேரிப்பட்டி, அரிமளம் சாலையில் உள்ள அந்தோணியார் கோவில் பகுதி உள்பட பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இவ்வாறு தேங்கி உள்ள மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு பல வகையான தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தேங்கி உள்ள மழைநீரை அகற்ற வேண்டும். மேலும் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : office ,Pudukkottai Panchayat Union ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்