×

கொள்ளிடம் ஆச்சாள்புரத்தில் பயன்பாடில்லாத கால்நடைப்பட்டி குப்பைதொட்டியாக மாறிய அவலம்

கொள்ளிடம், டிச.9: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சுற்றித்திரியும் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை அடைப்பதற்காக கட்டப்பட்டுள்ள கால்நடைப்பட்டியில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைமேடாக காட்சியளிக்கிறது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புதியதாக கால்நடைப்பட்டி கட்டப்பட்டது. தெருப்பகுதியிலோ அல்லது வயல்வெளியிலோ மேயும் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து வந்து அடைத்து பாதுகாக்கும் வகையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கால்நடைபட்டி கட்டப்பட்டது. கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு பிறகு பெயரளவில் திறக்கப்பட்ட இந்த கால்நடைப்பட்டி எந்த பயனும் இன்றி குப்பை கொட்டும் இடமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கால்நடைப்பட்டியில் அனைத்து வகையான குப்பைகளும் கொட்டப்பட்டு சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. இப்பட்டியின் முன்பகுதியில் அமைந்துள்ள இரும்பு கேட்டும் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளது. குப்பைகளும் புதரும் மண்டிக்கிடப்பதால் இதில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் குடியிருக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. எந்த பயனுமின்றியும் மேலும் எதற்கும் பயன்படாத வகையிலும் இருந்து குப்பை கொட்டும் இடமாகவும் இருந்து வரும் இந்த பாழடைந்த கால்நடைபட்டி கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : area ,garbage dump ,Ashakupuram ,
× RELATED சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிக்கு புயல் எச்சரிக்கை