×

அரசின் பங்களிப்போடு சூரிய ஒளி மூலம் வீடுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்

காரைக்கால், டிச. 9: காரைக்காலில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இணைய
தளம் மற்றும் செயலி வழியாக மின் கட்டணம் செலுத்தும் சேவையை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அமைச்சர் கமலக்கண்ணன்  நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மின்சாரத்துறை மூலமாக நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்துவதற்கு எளியமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின்சாரத்துறை அலுவலகத்திற்கு வருவதோ, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதோ தேவையில்லை. நுகர்வோர் நேரடியாக வருவது தவிர்க்கப்படுவதோடு, வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்த சேவை மூலமாக எளிதாக மின் கட்டணம்  செலுத்தலாம்.மேலும் சூரிய ஒளியில்இருந்து மின்சாரம்  பெறக்கூடிய புதிய முயற்சி உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் இந்த முயற்சி நடைபெற்று வருகிறது. மின் துறை தலைமை அலுவலகத்தில் மாடியில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகள் பொருத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வரும் காலங்களில் புதுச்சேரியில் உள்ள  வீடுகளின் உரிமையாளர்கள் தாங்கள் விரும்பினால்  சூரிய ஒளியில் இருந்து  மின் உற்பத்தி செய்யும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அதற்கு ஆகின்ற செலவில் 50 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும் வழங்க திட்டமிட்டிருக்கிறோம், மீதமுள்ள 40 சதவீதத்தை பயனாளிகள் தங்கள் செலவில் செய்து, கிடைக்கின்ற மின்சாரத்தில் அவர்கள் தேவை போக கூடுதலாக இருந்தால் அதனை மின்சாரத்துறை பெற்றுக் கொள்ளும். அதற்கான கட்டணத்தை மின்சாரத்துறை கொடுத்துவிடும். இந்த முயற்சி ஒரு சில மாதங்களில்  புதுச்சேரி முழுவதும் நடக்க இருக்கிறது.  ஒவ்வொரு தொகுதிக்கும் 300 வீடுகள் மின் உற்பத்தி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு வீட்டு மாடியில் சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தி தகடுகள் பொருத்தப்பட்டு, அவர்கள் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மின்சாரத் துறைக்கு அளிக்கின்ற நிகழ்வு நடைபெற இருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.



Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...