88 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு சிக்கல்

புதுச்சேரி, டிச. 9: 88 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரெஞ்சு நிறுவனத்தின் மாற்று திட்டம் கை கொடுக்குமா? என்பது விரைவில் தெரியவரும். புதுச்சேரி மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதற்கு பிரெஞ்சு அரசின் உதவியுடன்  ஒருங்கிணைந்த குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி ரூ. 434 கோடியில் நகரப்பகுதி மக்களுக்கு தரமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு வசதியாக கிராமப்பகுதிகளில் புதிதாக 88 ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அங்கிருந்து நகரப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதே திட்டத்தின்  முக்கிய நோக்கமாக இருந்தது.  இது தொடர்பாக இரண்டு முறை பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.எங்கள் பகுதியில் எடுக்கப்படும் குடிநீர் எங்களுக்கு மட்டுமே, நகரப்பகுதிக்கு வழங்க முடியாது. எதிர்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். மேலும் ராட்சத போர்வெல் மூலம் குடிநீர் வெகுவேகமாக உறிஞ்சப்படும் போது, கடல் நீர் உட்புகுந்துவிடும் எனவே இதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.

ஏற்கனவே புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 227 போர்வெல்கள் போடப்பட்டிருக்கிறது. இதில் 155 ஆழ் குழாய்களில் தண்ணீரின் தன்மை மாறிவிட்டது.  குறிப்பாக 132 கிணறுகளில் அதிகளவு உப்பும்,  நைட்ரேட் தன்மையும் இருப்பதால் குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது.இதன்காரணமாக தண்ணீரை சுத்தம் செய்தே  குடிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. மேலும் டிடிஎஸ் அளவை குறைக்க ஒரு போர்வெல் தண்ணீரை மற்றவற்றுடன் கலந்து பொதுப்பணித்துறையினர்  வழங்குகின்றனர்.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில், புதுச்சேரியில் மிகப்பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது நாளொன்று 122 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி நகரப்பகுதி சராசரியாக மக்களுக்கு  135 லிட்டரும், கிராமப்பகுதி மக்களுக்கு 70 லிட்டரும் பொதுப்பணித்துறை வழங்கி வருகிறது. எனவே ஒருங்கிணைந்த குடிநீர் திட்டப்பணிகள் மிகவும்  அத்தியாவசியமானது என்றாலும் பொதுமக்களின் எதிர்ப்பால் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது.   

இந்நிலையில் பிரான்சே டி டெவலப்மென்ட்( ஏஎப்டி) குழுவினர், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேசினர். 88 ஆழ்குழாய் புதிதாக அமைக்கப்படுவது அவசியம். இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகளில் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே மக்களை சமாதானம் செய்து, ஆழ்குழாய் அமைக்க வேண்டும், மேலும் நகரப்பகுதியில் குடிநீரை சுத்தம் செய்து வழங்கும் சாதனங்களை பொருத்துவது, நிலத்தடி நீரை பழைய நிலைக்கு கொண்டுவருதல், கடல் நீரை குடிநீராக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

அமைச்சர் நமச்சிவாயம் அவர்களிடம் கூறும்போது,  பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக கிராமப்பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் பெரும் பிரச்னை இருக்கிறது. எனவே நிலத்தடி நீரை மேம்படுத்தல், சுத்திகரிப்பு சாதனங்கள் பொருத்துதல், கடல் நீரை குடிநீராக்குதல்  உள்ளிட்ட மாற்று திட்டங்களை  மட்டுமே இப்போதைக்கு மேற்கொள்ளமுடியும்.  கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கும் பெரும் செலவாகும் எனவே இப்போதைக்கு அது சரியாக இருக்காது. ஏற்கனவே ஊரும், நீரும் திட்டம் மற்றும் தனியார் பங்களிப்புடன் நீர் நிலைகள் தூர்வாரப்படுகிறது.  எனவே ஆக்கிரமிப்பில் இருந்து காக்கவும், மண் சரிந்து விழாமல் இருக்கவும் கரைகள் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி  உதவி செய்யுமாறு பிரெஞ்சு குழுவினரை கேட்டு கொண்டார். மெலும் புதிதாக திட்ட அறிக்கையை கொடுக்குமாறு தெரிவித்தார்.

Related Stories: