×

புதுவையில் பரபரப்பு வெங்காய மூட்டை திருடிய நபரை தாக்கியவர் கைது

புதுச்சேரி, டிச. 9: புதுச்சேரியில் வெங்காய மூட்டை திருடிய நபரை கட்டி வைத்து தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி நேரு வீதியில் குபேர் அங்காடி என்ற பெயரில் பெரிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட காய்கறி, பழங்கள், மளிகை, அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள், பூக்கடைகள் உள்ளன. மார்க்கெட்டை ஒட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியிலும் மொத்த காய்கறி விற்பனை அங்காடிகள் இயங்கி வருகின்றன. இங்கு வேல்முருகன் என்பவர் மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பெங்களூரில் இருந்து அவரது கடைக்கு வெங்காய மூட்டை லோடு வந்தது. இதனை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி வைத்தனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி, 50 கிலோ எடை கொண்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெங்காய மூட்டை ஒன்றை எடுத்து திருட முயன்றார். இதைபார்த்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓடிவந்து அந்த மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து அங்குள்ள சிமென்ட் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அப்போது அவர், முத்தரையர்பாளையம் காந்திதிருநல்லூர் பம்ப் ஹவுஸ் வீதியை சேர்ந்த சங்கர் (49) என தெரியவந்தது. முதலில் ஒரு வெங்காய மூட்டையை திருடிச் சென்று வீட்டில் வைத்து விட்டு 2வது மூட்டையை திருடும்போது மாட்டிக் கொண்ட
தாக தெரிவித்தார். இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்று திருடி வைத்திருந்த வெங்காய மூட்டையை கைப்பற்றினர். அப்போது சங்கர் மனைவி கதறி அழுததால் போலீசில் வேல்முருகன் புகார் அளிக்கவில்லை. வெங்காயம் விலை கிலோ ரூ.140க்கு மேல் விற்கும் நிலையில் இத்திருட்டு சம்பவம் நடந்துள்ளது.இதற்கிடையே, வெங்காயம் திருடிய நபரை கைது செய்யாமல், அவரை கட்டி வைத்து தாக்ய நபரை பெரியகடை போலீசார் கைது செய்துள்ளனர். திருடிய நபர் சங்கரிடம் இது தொடர்பாக புகாரை பெற்று, தேங்காய்திட்டை சேர்ந்த லோடுமேன் அசோக் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.வெங்காயம் திருடிய நபரை விட்டுவிட்டு, அவரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : robbery ,
× RELATED மைத்துனரை வெட்டியவர் கைது