×

புதுவையில் சுகாதாரம் சிறந்த முறையில் உள்ளது

புதுச்சேரி, டிச. 9: இந்திய வாதவியல் சங்கத்தின் 35வது ஆண்டு மாநாடு புதுச்சேரி ஜிப்மரில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, துபாய், இலங்கை, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50க்கும் மேற்பட்ட வாதநோய் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ஜிப்மர் மருத்துவமனை நாட்டில் உள்ள முக்கிய மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் மூன்றாவதாக உள்ளது. இந்திய வாதவியல் சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஜிப்மர் மாணவர்தான். நாட்டில் மருத்துவ ஆராய்ச்சி மிக முக்கியம். இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளூரிலேயே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மருத்துவ நிதியுதவியை குறைந்த அளவே ஒதுக்கி வருகிறது.

 கிராமப்புற மக்கள் சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல் நகர்ப்புற மக்கள் பணக்கார வாழ்க்கையில் துரித உணவுகளை சாப்பிட்டு நிறைய நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். புதுச்சேரியில் சுகாதாரம் சிறந்த முறையில் உள்ளது. குறிப்பாக வெளிநோயாளிகள் பிரிவில் நாட்டிலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்காக விருது பெற்றுள்ளோம். இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை ஜிப்மர் இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் ஜிப்மர் ஏழைகளின் சொர்க்கமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் சுவாடு, டெல்லி பிரெஞ்சு தூதரகத்தின் சிஎன்ஆர்எஸ் அலுவலக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் காவேரி, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால்,  இந்திய வாதவியல் சங்க தலைவர் டெபாஷிஸ் டாண்டா, மாநாடு ஒருங்கிணைப்பு தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு செயலாளர் ெநகி நன்றி கூறினார்.

Tags :
× RELATED இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் ஆரோக்கியம் காப்போம்!