புதுவை நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும்

புதுச்சேரி, டிச. 9: புதுவை நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி தெரிவித்தார். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 70வது சட்ட நாள் விழா நூறடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. சங்க தலைவர் முத்துவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி கலந்து கொண்டு பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டங்கள் வாழ்க்கைக்கான வாய்ப்புகளையும், கவுரவத்தையும் தந்துள்ளது. இந்த அரசியலமைப்பு நமது நாட்டின் பன்முகத்தன்மை, மாநில வேறுபாடுகள், அரசியல், வெவ்வேறு சமூக வேறுபாடுகளில் ஒற்றுமையை வளர்த்து வருகிறது. வழக்கறிஞர்களை தவிர, வேறேந்த தொழிலிலோ, எந்த இடத்திலோ, தனித்தன்மை கொண்ட மனிதர்களாலோ, மற்றவர்களாலோ அரசியலமைப்பு என்ற விஷயத்தை வலியுறுத்த இயலாது. வழக்கறிஞர்கள், நீதிபதிகளாக உயரும்போதும் இது மிக அதிகமாக பயன்படுகிறது. ஆனால் இதனை டாக்டர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட யாருமே வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உங்களது (வழக்கறிஞர்கள்) பொறுப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் இந்த அரசியலமைப்பின் மிக முக்கிய நபராக உள்ளீர்கள் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இதனால்தான் நீங்கள் அரசியலமைப்பு நாள் மற்றும் சட்ட நாளினை கொண்டாட அதிகம் தகுதி பெற்றுள்ளீர்கள். ஏனெனில் இது உங்களது கடமை.

 சட்டங்களுக்காக வாழாமல், உண்மையுடன் வாழுங்கள். அப்படி வாழ்ந்தால் நீங்கள்தான் சட்டத்துக்கு மிகப்பெரிய பொக்கிஷம். கடைநிலை மனிதனின் கண்ணீரை துடைக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார்.  அதன்படி, வழக்கறிஞர்கள் செயல்பட்டு கடைநிலை மனிதனுக்கும் சட்டத்தின் மூலம் நிவாரணம் கிடைக்க உதவி செய்ய வேண்டும். உங்களிடம் சட்டம் தொடர்பாக யார் உதவி கேட்டாலும், எந்நேரமும் செய்ய தயாராக இருக்க வேண்டும். இதற்காக அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் சட்டத்தை மட்டும் படிக்காமல், மனிதர்களின் வாழ்க்கையும் படித்து வைத்திருக்க வேண்டும். வாள்முனையை விட பேனாமுனைக்கே சக்தி அதிகம். அந்த பேனாவை வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண விழைய வேண்டும். ஆனால் அந்த தீர்வு சட்டத்தின் வழியே இருக்க வேண்டும். சட்டம் நல்லது, ஆனால் தீர்ப்பு சிறந்தது. இதனை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாயம் நீதியை நம்புகிறது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். புதுச்சேரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.   இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுச்சேரி தலைமை நீதிபதி  தனபால், சட்ட செயலர் ஜூலியட் புஷ்பா, நீதிபதி ஷோபனா தேவி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: