×

குடியிருப்புகளில் புகுந்த பாதாள சாக்கடை நீர்

கடலூர், டிச. 9: கடலூரில் பாதாள சாக்கடை குழாய்கள் மற்றும மேன்ஹோல்கள் உடைந்து நொறுங்கி கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பாய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் ரட்சகர் நகர், ரமணா நகர் குடியிருப்புகளில்  ஏராளமான வீடுகள் உள்ளன. பெரும்பாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளின் பின்பகுதியில் (அரசு ஐடிஐ பின்புறம்) உள்ள பாதாள சாக்கடையின் மேன் ஹோலில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக கழிவு நீர் பம்ப் செட்டிலிருந்து வருவதை போல வெளியேறி அந்த பகுதி முழுவதும் சக்கடை குளமாக மாறியுள்ளது.இது முழுக்க முழுக்க செப்டிக் டேங்க் கழிவுநீராக இருப்பதால் துர்நாற்றம் வீசி பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு ஐடிஐ மாணவ, மாணவிகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரிடம் முறையிட்டும் அந்த இடத்தை நேரில் வந்து பார்த்து சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் பாய்ந்து கொண்டே இருப்பது அப்பகுதி மக்களை கவலையடைய செய்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி சுகாதார ஆய்வாளரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்ட போது ஆணையரை பாருங்கள் என்று அலட்சியமாக பதில் சொன்னதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.  தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு தொடர்பாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த குடியிருப்போர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக அரசு பணியாளர்கள் சங்க மாநிலதுணைத் தலைவர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அனைவருக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளதாகவும் விரைவில் போராட்டம் நடத்துவதற்கு பொதுமக்கள் ஆயத்தமாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு