×

மீன்பிடிக்க சென்ற போது கடலில் படகு கவிழ்ந்து விபத்து 3 மீனவர்கள் படுகாயம்

புவனகிரி, டிச. 9: பரங்கிப்பேட்டை அருகே கடலில் படகு கவிழ்ந்து 5 மீனவர்கள் உயிர் தப்பினர். இவர்களில் 3 பேர் படுகாயம் அடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.புவனகிரி அருகே பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார கடலோர கிராமங்களில் கடந்த சில தினங்களாகவே கடலில் பலத்த காற்று வீசுவதால் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை சாமியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 250 மீட்டர் தூரம் சென்ற போது திடீரென கடல் காற்று மற்றும் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 5 மீனவர்களும் கடலில் மூழ்கினர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட 5 பேரும் கடலில் நீந்தியபடியே கரைக்கு வந்தனர். அப்போது அலைகளின் வேகத்தில் சிக்கியும், படகில் மோதியும் சாமியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சந்திரன், மோகன், செல்வராஜ் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். மற்ற இருவரும் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த 3 மீனவர்களும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : fishermen ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...