விருத்தாசலம் மாரி ஓடை அருகே மணிமுக்தாற்றில் தொடரும் மணல் திருட்டு

விருத்தாசலம், டிச. 9: மணிமுக்தாற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து விருத்தாசலம் பகுதி வழியாக கடலில் கலக்கும் மணிமுக்தாற்றின் மூலம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக வானிலை மாற்றத்தின் காரணமாக பெய்ய வேண்டிய நேரத்தில் மழை பெய்வதில்லை. இதனால் ஏமாற்றப்படும் விவசாயிகள், மணிமுக்தாற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் குறையாமல் இருந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், விருத்தாசலம் நாச்சியார்பேட்டை அருகே மாரி ஓடைக்கும்-ரயில்வே மேம்பாலத்திற்கும் இடையே உள்ள மணிமுக்தாற்றில், பல டன் எடையுள்ள மணல், தினமும் இரவு மற்றும் பகல் நேரங்களில் திருடப்பட்டு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மணவாளநல்லூரில் அரசு மாட்டுவண்டி மணல் குவாரி நடைபெற்று வந்தது. தற்போது மழையில்லாத காரணத்தால் குடிதண்ணீர் மற்றும் விவசாயம் செய்ய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதை தொடர்ந்து அப்போது இருந்த விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த்தின் அதிரடி நடவடிக்கையால் மணல் குவாரி மூடப்பட்டது. அவ்வாறு உள்ள சூழ்நிலையில் நாச்சியார்பேட்டை மாரி ஓடை அருகே இரவு மற்றும் பகல் நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தினமும் மணல் திருடி வருகின்றனர். மேலும் தொழிலாளர்களை வைத்து ஆற்றில் மூட்டை மூட்டையாக மணலை கொண்டு வந்து கரையோரம் அடுக்கி வைத்து பின்னர் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக ஆற்றின் கரையோரம் விவசாய நிலம் வைத்திருக்கும் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தின் வழியாக செல்வதற்கு ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொண்டு மாட்டு வண்டிகள், லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தருகின்றனர்.

இதற்காக பகல் நேரங்களில் மணலை சிமென்ட் சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்து அடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆறுகளில் மணலை குவியல் குவியலாக குவித்து வைத்துவிட்டு, இரவு நேரங்களில் லாரிகளோடு வந்து அள்ளிசெல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அப்பகுதிகளில் வாலிபர்கள் பலர் மதுபோதையில் சுற்றி திரிகின்றனர். இது குறித்து பொதுமக்கள் யாரேனும் கேட்டால் கொலைசெய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். மேலும் இறந்தவர்களை புதைக்கும் சுடுகாடும் இந்த ஆற்றில் உள்ளது. சில சமயங்களில் மணல் அள்ளும்போது இறந்தவர்களின் எலும்பு கூடுகளை வெளியே எடுத்து போட்டுவிட்டு மணலை அள்ளி செல்கின்றனர். இதனை பார்த்து பொதுமக்கள் பயந்து அச்சப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து எங்கள் பகுதிகளில் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மணல் அள்ளுவதற்காக அந்த தடுப்பு சுவரை மணல் கொள்ளையர்கள் இடித்து வழி ஏற்படுத்தி உள்ளனர். இதனால் ஆற்றில் வெள்ளம் வரும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் செல்லும் அபாயம் ஏற்படுகிறது.விருத்தாசலம் நாச்சியார்பேட்டை, மாரி ஓடையருகே நடைபெறும் மணல் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : stream ,Manimukkadar ,Vriddhasalam Maari ,
× RELATED மணல் திருட்டை தடுக்க மனு...