×

குமரி மாவட்ட கோயில்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாட்டம்

நாகர்கோவில், டிச.9: திருகார்த்திகையையொட்டி குமரி மாவட்ட கோயில்களில் நாளை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நட்சத்திர தினத்தன்று திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குமரி மாவட்ட கோயில்கள், வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு (நாளை) 10ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா ஆகும். இதையொட்டி அன்று கோயில்கள், வீடுகளில் தீப அலங்காரங்கள் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அன்று மருந்துவாழ்மலையில் உள்ள பரமார்த்தலிங்கபுரம் சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அன்னதானம் போன்றவை நடத்தப்படுகிறது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடக்கின்றன. பின்னர் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவே அமையப்பெற்றுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பாறையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று இரவு பகவதி அம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் டிசம்பர் 10ம் தேதி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள், தீபாராதனை ஆகியன நடக்கிறது. இரவு 7 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படும். தொடர்ந்து அம்மன், சுவாமி, பெருமாள், முருகன் ஆகியோர் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகை தருகின்றனர். இதனை போன்று நாகர்கோவில் நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி கிருஷ்ணசுவாமி கோயில், பறக்கை மதுசூதனபெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோயில், அழகம்மன் கோவில், கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறும்.மாவட்டம் முழுவதும் வீடுகளின் வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டும், அகல் விளக்குகள் ஏற்றியும் கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாடுவர். இதற்காக மண் விளக்குகள் பல வடிவங்களிலும் இப்போதே விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. நாகர்கோவில் வடசேரி, ஒழுகினசேரி அப்டா  மார்க்கெட் பகுதியில் சாலை ஓரங்களில் திருக்கார்த்திகை விளக்குகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Celebration ,Tirukkartti Deepavathi Festival ,Kumari District Temples ,
× RELATED நேதாஜி பிறந்தநாள் விழா