குலசேகரம் அருகே பரிதாபம் கால்வாயில் கார் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை பலி

குலசேகரம், டிச.9: குலசேகரம் அருகே கார் கால்வாயில் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.குமரி மாவட்டம் குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை, முக்கம்பாலவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ்(30). கூலித்தொழிலாளி. இவர் தேன் பெட்டி தயாரிப்பு மற்றும் மார்பிள் வேலைக்கு செல்வது வழக்கம். இவருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு களியல் பகுதியை சேர்ந்த மஞ்சு(26) என்பவருடன் திருமணம் நடந்தது. மஞ்சு, களியல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.  அனிஷ் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அமர்நாத் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உண்டு.
அனிஷ் கடந்த சில வாரங்களாக கேரளாவில் தேன் பெட்டி தயாரிப்பு தொழில் செய்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாததால் மஞ்சு குழந்தையுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அனிஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இதனையடுத்து மனைவி, குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மதியம் மனைவி, குழந்தையுடன் தனது காரில் அழைத்துக்கொண்டு குலசேகரம் சென்று கடைகளில்  பொருட்கள் வாங்கியுள்ளனர். அப்போது குழந்தைக்கு புதிய உடை மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

பின்னர் காரில் அஞ்சுகண்டறை பகுதிக்கு திரும்பியுள்ளனர். கார் குலசேகரம்-திருநந்திக்கரை சாலையில் இருந்து அஞ்சுகண்டறை செல்வதற்கு கோதையாறு இடதுகரை கால்வாய் கரையில் வந்துகொண்டிருந்தபோது கயக்குண்டு என்ற இடத்தில் திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் விழுந்தது கால்வாய் ஆழமான பகுதி என்பதுடன் தண்ணீரும் பெருமளவு சென்றுகொண்டிருந்தது. மேலும் கார் சரிந்து கவிழுந்ததால் காரின் உள்ளே இருந்த அனீஷால் உடனே தப்ப முடியவில்லை. மேலும் அந்த பகுதி மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி என்பதால் மக்கள் கவனிக்கவில்லை.  கார் விழுந்த சப்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். கால்வாய் ஆபத்தான பகுதி என்பதாலும் காரை தண்ணீர் சிறிது சிறிதாக இழுத்து சென்றதாலும் அவர்களால் உடனடியாக மீட்க முடியவில்லை. பொதுமக்கள் சாலையில் வருவோர் போவார் மற்றும் அக்கம்பக்கத்தினரை வரவழைத்து காரை கயிறு கட்டி ஆழமான பகுதியில் இருந்து ஆழம் குறைந்த பகுதிக்கு இழுத்து வந்தனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த மூன்று பேரையும் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். மீட்கும்போது அனிஷூக்கு மட்டும் நாடி துடிப்பு லேசாக இருந்தது. உடனே மூன்று பேரையும் அந்த பகுதியில் வந்த ஆட்டோவில் ஏற்றி குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருநந்திக்கரை பகுதியில் தகவல் அறிந்து வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்சில் மூவரையும் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவம் இடம் வந்து விசாரணை மேற்கொண்டார். குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். கார், ஓட்டி செல்லும்போது பைக் அல்லது வேறு ஏதேனும் வானங்கள் வந்தபோது நிலைதடுமாறி விபத்து நிகழ்ந்ததா? அல்லது விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் கார் விபத்தில் கால்வாய் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குலசேகரம், அஞ்சுகண்டறை பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : car accident ,
× RELATED போதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது