மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் நடைபாதை அமைக்கும் பணி தொடக்கம்

வேலூர், டிச.9: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் கோட்டை, பிரமிக்க வைக்கும் சிற்பங்களுடன், சுற்றிலும் அகழியுடன் அமைந்து சிறந்த வரலாற்று சின்னமாகவும், வேலூரின் அடையாளமாகவும் திகழ்கிறது. கோட்டையின் உள்ளே அனைத்து மத வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகம், காவலர் பயிற்சி பள்ளி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. இதனைக் காண உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், மற்றும் வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில், வரலாற்று புகழ்மிக்க வேலூர் கோட்டையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதற்கேற்ப மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை மேம்படுத்த ₹33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertising
Advertising

இந்நிதியில் அகழி தூர்வாருதல், சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகொடிகள் அகற்றுதல், சுற்றுச்சுவர்களில் வண்ண விளக்குகள் பொருத்துதல், கோட்டை பின்புறத்தில் லேசர் அரங்கம் அமைத்தல், திறந்தவெளி திரையரங்கம், உணவகம், குழந்தைகளுக்கான கேளிக்கை பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்குதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.முதற்கட்டமாக கோட்டை அகழி தூர்வாரும் பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில், கோட்டையை அழகுப்படுத்தும் விதமாக நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சென்று கோட்டையை ரசித்து மகிழும் வகையில் சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கிரிப் டைல்ஸ்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும், நடைபாதை முழுவதும் தடுப்பு சங்கிலிகள் பொருத்தப்படும். இடவசதி உள்ள இடங்களில் இருக்கைகள் அமைக்கப்படும். ஆங்காங்கே குடிநீர் நிலையங்களும் அமைக்கப்படும்’ என்றனர்.

Related Stories: