மாணவர்களின் துறைரீதியான ஆர்வத்தை கண்டறிய 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நாட்டமறிதல் தேர்வு பள்ளிகளில் பழுதடைந்த கணினிகளை சரி செய்ய உத்தரவு

வேலூர், டிச.9:மாணவர்களின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறிந்து வழிநடத்தி செல்வதற்காக, நடப்பு கல்வி ஆண்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நாட்டமறிதல் தேர்வு என்ற புதிய தேர்வை நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிலேயே 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு காலஅட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் படித்து வரும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக ஒரு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் 2019-20ம் கல்வி ஆண்டு அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறிதல் தேர்வு என்ற பெயரில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இத்தேர்வை 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 8 லட்சத்து 45 ஆயிரத்து 218 பேர் எழுத உள்ளனர்.

Advertising
Advertising

இதற்காக மாவட்ட அளவில் இணையதள வசதியுடன் உள்ள பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள கணினிகளை தேர்வு செய்து இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக பழுதடைந்த கணினிகளை உடனடியாக பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளது. இத்தேர்வை நடத்துவதற்கு 20 மாணவர்களுக்கு ஒரு கணினி ஆசிரியர் என்ற கணக்கின்படி அல்லது கணினி பயன்பாட்டில் திறமை அனுபவம் உள்ள ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.நாட்டமறிதல் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் தேர்வை அனைத்துக்குழு உறுப்பினர்களும் பகுதிவாரியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு இணையதளத்தில் நாட்டமறிதல் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தேர்வுக்கு முன்பாக வினாக்களின் வகைகளை அறிமுகம் செய்து அவைசார்ந்த முறையாக பயிற்சி அளிக்க வேண்டும்.வினா ஒன்றுக்கு பதில் அளிக்க ஒரு நிமிடம் அவகாசம் என்ற ரீதியில் தேர்வு நடைபெறும். எதிர்மறை மதிப்பெண் கிடையாது. அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வு நேரத்துக்கு கூடுதலாக நேரம் அனுமதியில்லை. ஒவ்வொரு முறையும் தேர்வு நடைபெறும்போது வினாத்தாள்கள் மாற்றம் பெறும். இது மதிப்பெண் அடிப்படையிலான தேர்வு இல்லை என்றும் ஒரு தன்னிலை திறன் அறியும் பயிற்சி என்றும் பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். மாணவர்கள் தேர்வின்போது சக மாணவர்களுடன் விவாதம் செய்யக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எத்தகைய துறையில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறிவதற்காகவே இத்தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கேற்ப அவர்கள் தங்கள் உயர்படிப்பை தேர்வு செய்வதற்கு இத்தேர்வு மூலம் பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதற்கான உந்துதலையும் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில் இது கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் பதிவு செய்யப்படுவதால் மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை மையமாக வைத்து அவர்களின் எதிர்கால கல்வி தீர்மானிக்கப்படும். அதேநேரத்தில் எந்த துறையிலும் ஆர்வம் இல்லா நிலை என தேர்வு முடிவில் தெரியவந்தால் தேர்வில் சிறப்பிடம் பெறாத மாணவர்கள் தங்கள் மேற்படிப்பபு இதனால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Stories: