மழையின் நனைந்து வீணாகும் ஏசி இயந்திரம் நோயாளிகள் மூச்சு விடமுடியாமல் பரிதவிப்பு 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்த நிழற்கூரை இல்லாமல்

வேலூர், டிச.9: 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க நிழற்கூரை வசதியில்லாததால் மழையில் நனையும் ஏசி இயந்திரம் அடிக்கடி பழுதடைகிறது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்லும் நோயாளிகள் மூச்சு விடமுடியாமல் பரிதவித்து வருகின்றனர்.தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2008ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளையொட்டி 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் 21 ஆம்புலன்ஸ்களை கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டது.பின்னர், இந்த சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 951 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் என மொத்தம் 4,500 பேர் வேலை செய்து வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விபத்து மற்றும் மகப்பேறு காலங்களில் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்படும் பொதுமக்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் செயற்கை சுவாசக் கருவிகள், ஊசி, குளுகோஸ் பாட்டில்கள், காட்டன் துணிகள், பஞ்சு மற்றும் மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.விபத்து மற்றும் உடல்நிலை பாதிக்கப்படும் நோயாளிகள் முழுமையான பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு செல்லும் வகையில் 108 ஆம்புலன்ஸ்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் நிறுத்தப்படுவதால் ஏசி இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், ‘தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விபத்து ஏற்படும் முக்கிய வழித்தடங்களில் நிறுத்தப்படுகிறது. விபத்து காலங்களில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறது.இந்நிலையில், திறந்தவெளியில் நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏசி இயந்திரம் பழுதடைந்துவிடுகிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் பின்பக்க கதவுகள் மட்டுமே திறக்கப்படும். காற்று உள்நுழைய வழியில்லாத நிலையில் ஏசி பழுது காரணமாக நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் வியர்வையில் குளித்து பரிதவிக்கின்றனர்.அதேபோல், நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் பெண் மருத்துவ உதவியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக கன்டெய்னர்கள் அமைத்து அறைகள் அமைக்க வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் திறந்த வெளியில் நிற்பதை தடுக்கும் விதமாக நிழற்கூரைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: